அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Tuesday, October 14, 2008

அநீதி தவிர்..

1666. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2447 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


1667. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :2442 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


1668. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
புஹாரி :4686 அபூமூஸா (ரலி).

Monday, October 13, 2008

விசுவாசியின் பிணி பாவ பரிகாரமே

இறைத்தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை..புஹாரி :5646 ஆயிஷா (ரலி).

1662. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்'' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 5648 இப்னு மஸ்ஊது (ரலி).

1663. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5640 ஆயிஷா (ரலி) .

1664. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5641 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி) .


1665. இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
புஹாரி :5652.அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்).

மரணத் தருவாயில்..َபெருமானார் (ஸல்.

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் 'உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தால் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சித்தேன்'' என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)மேலும், ''அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா'' என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) ''எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!'' என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். ''ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி (ஸல்) தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் åத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.'' (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:''நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். ''நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?'' என்று கேட்டபோது, ''ஆம்!'' என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. ''நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?'' என்று கேட்டேன். தலை அசைத்து ''ஆம்!'' என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.''இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: ''நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். ''லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.நபி (ஸல்) அப்போது ''இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

அபுபக்கர் (ரலி)......
07, ஜமாதுல் ஆகிர் ஹிஜ்ரி 13, ஆம் ஆண்டில், ஒரு குளிர் நாளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் குளித்து விட்டு வரும் பொழுது அடித்த குளிர் காற்றில் அவர்களது மேனியில் தாக்கப்பட்டதன் காரணமாக, உடனே அவர்களுக்கு காய்ச்சல் காண ஆரம்பித்து விட்டது. அதுவே அவர்களது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.பதினைந்து நாட்களாக அவர்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். அவர்களது நிலைமை மிகவும் மோசமாக ஆனதுடன், பள்ளிவாசலுக்குச் சென்று தொழவே மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களை இமாமாக நியமித்து தொழுகைகளை நடத்தும்படி உத்தரவிட்டார்கள்.
இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டிருந்த பொழுது, மருத்துவர் அழைக்கப்பட்டார். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களோ எல்லாம் முடிந்து விட்டது, இனி மருத்துவர் வந்து என்ன பயன்! என்று கூறி விட்டார்கள். மீண்டும் அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது, நான் என்ன சொல்கின்றேனோ அதனை நீங்கள் செய்தால் போதுமானது என்று கூறி விட்டார்கள். எனவே, மீண்டும் அபுபக்கர் (ரலி) அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாத தோழர்களும், குடும்பத்தவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள்.
நோய்வாய்ப்பட்;டிருந்த அந்த கால கட்டத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த வீட்டில் - அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளிக்கு மிக அருகிலேயே தனது இறுதிக் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களது வீடும் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு மிகத் தொலைவில் ஒன்றும் இல்லை, அன்னார் தனது அதிகமான நேரங்களை அபுபக்கர் (ரலி) அவர்களுடனேயே கழித்தார்கள். எப்பொழுதும் அபுபக்கர் (ரலி) அவர்களது படுக்கைக்கு மிக அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இப்பொழுது கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள், தனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்றும், அவ்வாறு தான் செய்யவில்லையாயின் மக்கள் தங்களுக்குள் முட்டி மோதி, ஒரு குழப்பமான நிலை உருவாகி விடுமே என்றும் கருதலானார்கள். தனது விருப்பத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூத்த தோழர்களிடம் கலந்தாலோசனை செய்து, இறுதியாக உமர் (ரலி) அவர்களை தனக்குப் பின் அடுத்த கலீஃபாவாக நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.உமர் (ரலி) அவர்களின் முன் கோபம் குறித்து சிலர் அவரை ஆட்சியாளராக நியமிப்பது குறித்து அச்சம் தெரிவித்தனர். அத்தகையவர்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், உமர் (ரலி) அவர்களிடம் உள்ள நற்குணம் என்னவென்றால், ஆட்சித் தலைவருக்கே உரிய குணங்களான, வளைந்து கொடுத்துப் போகாத தன்மையும், இளகிய மனதும் அவரிடம் இருக்கின்றது என்று விளக்கமளித்தார்கள். மேலும் தொடர்ந்து, நான் அவரிடம் பழகிய நாட்களின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின்படி, நான் கோபமாக இருக்கின்ற சமயத்தில் அவர் என்னை சாந்தப்படுத்த முயற்சி செய்திருக்கின்றார், இன்னும் இளகிய மனதுடன் காணப்பட்ட இடங்களில் உறுதியுடன் இருக்குமாறும் அவர் எனக்கு அறிவுரை பகர்ந்துள்ளார்.
மேற்கண்ட அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் மாடிப் பகுதிக்குச் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள், மிகவும் தளர்ந்து போயிருந்த காரணத்தால், தனது மனைவியான அமிஸ் அவர்களின் மகளான அஸ்மா அவர்களின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டவராக அங்கே கூடி நின்ற மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :
எனக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நடத்துவதற்காக நான் தேர்ந்தெடுத்திருக்கின்ற நபரை நீங்கள் உங்களது ஆட்சியாளராக ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். நிச்சயமாக, நான் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன் என்பதனை விளக்குவதற்கு எனது உடல் வலி இடம் தராத நிலையில் நான் இருக்கின்றேன். நான் எனது உறவினர் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. எனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குரியவராக, உமர் (ரலி) அவர்களையே நான் தேர்வு செய்துள்ளேன். நான் சொல்வதை செவிதாழ்த்திக் கேளுங்கள், எனது விருப்பத்திற்கு நீங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள் என்று தனது உரையை முடித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருமித்த குரலில், ''நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், அதற்கு கட்டுப்படுகின்றோம்'' என்று கூறினார்கள்.
அதன் பின் அங்கிருந்த உதுமான் (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது உரையை மக்களிடம் வாசித்துக் காண்பிக்குமாறு கூறினார்கள் :
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்...
அபுபக்கர் பின் அபூ குஹஃபா ஆகிய நான் இந்த உலகத்தை விட்டுப் பிரிகின்ற தருணத்தில் இன்னும் மறுமைக்குப் பயணப்படுகின்ற ஆரம்ப நேரத்தில், இன்னும் நிராகரிப்பளர்கள் சத்தியத்தை விசுவாசிப்பவர்களாக மாற விரும்புகின்ற, சத்தியத்தை அசாதாரணமாக கருதிக் கொண்டிருந்தவர்கள் சத்திய சீலர்களாக மாற நினைக்கின்ற மற்றும் பொய்யர்கள் சத்தியவான்களாக மாற விருக்கின்ற அந்த மறு உலகத்தின் முதற்படிக்குச் செல்வதற்காக உங்களிடம் பிரியாவிடை பகர்கின்ற நான் ஆற்றுகின்ற இறுதி உரையாகும் இது!
எனக்குப் பின் ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களை நான் நியமித்துள்ளேன். அவருக்கு செவிதாழ்த்துங்கள், கட்டுப்படுங்கள். (நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்) அல்லாஹ்வின் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என் மீது பொறுப்புச் சுமத்திய கடமைகளையும், இன்னும் உங்கள் மீதும் என் மீதும், நான் என்னால் இயலுமான வரை நிறைவேற்றி உள்ளேன். அவர் நீதி செலுத்தவராரென்றால், அதனைத் தான் அவரிடம் நான் எதிர்பார்த்தது. மேலும், அது நான் அவரிடம் அறிந்து வைத்திருந்தது, இன்னும் (நல்லதொரு) மாற்றங்கள் செய்வாரென்றால், அதில் கிடைக்கக் கூடிய நல்லனவற்றை நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள். என்னுடைய நோக்கம் சிறந்ததென்றே கருதுகின்றேன், ஆனால் மறைவானவற்றை நான் அறியக் கூடியவனல்லன். ஆனால், எவரொருவர் தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துவாரென்றால், அவர் விரைவில் ஆட்சிப் பொறுப்பினை விட்டும் எவ்வாறு அகற்றப்படுவார் என்பதனையும் கண்டு கொள்வார்.உங்கள் மீது இறைவனது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! (என்று கூறி தனது உரையை முடித்தார்கள்).
இந்த உரையை முடித்த பின் ஒரு மனிதர் அபுபக்கர் (ரலி) அவர்களைச் சந்தித்து, உமரையா உங்களையடுத்த ஆட்சியாளராக நியமித்திருக்கின்றீர்கள், உங்கள் முன்பதாகவே அவர் மக்களை எந்தவிதமாக நடத்தினார்கள் என்பதனை நீங்கள் அறியாததொன்றுமல்ல என்று கூறினார். இப்பொழுது அவரே முழு ஆட்சிப் பொறுப்புக்கும் உரித்தவராகி விட்டார், மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம் என்றும் வந்த அந்த மனிதர் கூறினார். நீங்கள் இப்பொழுது உங்களது இறைவனைச் சந்திக்கப் போகின்றீர்கள், மக்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உங்களின் இந்த நிலை குறித்து அங்கே நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என்றும் அந்த நபர் கூறினார். படுக்கையில் படுத்துக் கிடந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், வந்திருந்த நபரை அமரச் சொல்லி விட்டு, எனது இறைவனைச் சந்திக்கின்ற பொழுது, அச்சத்தோடு அவனைச் சந்திக்கின்ற நிலையைக் கூறி என்னை கலவரமடையச் செய்கின்றீர்களா? எனது இறைவன் முன்னிலையில் நான் நின்று கொண்டிருக்கும் பொழுது, 'உன்னுடைய படைப்பினங்களிலேயே உன்னதமான படைப்பளார் ஒருவரை எனக்குப் பின் ஆட்சியாளராக நியமித்து விட்டு வந்திருக்கின்றேன்' என்ற பதிலைக் கூறுவேன் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறி விட்டு, உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.
தனிமையில் அவர்களை அமர வைத்து, உமர் (ரலி) அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறினார்கள். பின்பு, இறைவனை நோக்கி கையை உயர்த்திய அபுபக்கர்(ரலி) அவர்கள், இறைவா! இந்த மக்களின் நல்வாழ்வுக்காகவே இவரை நான் தேர்வு செய்தேன், இன்னும் ஒருவரோடு ஒருவர் கருத்துமுரண்பாடு கொள்வதனின்றும் தடுக்கும் பொருட்டே இந்தத் தேர்வினை நான் செய்தேன். நீயே மிக அறிந்தவன்! என்று கூறினார். மிக நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே நான் உமரை எனக்குப் பின்னர் ஆட்சியாளராக நியமித்தேன். மிகச் சிறந்தவரும், உறுதி படைத்தவரும், இன்னும் நேர்வழியைப் பின்பற்றி நடப்பதற்கு ஆர்வம் கொண்டவருமாவார். யா அல்லாஹ்! ஆட்சியாளர்களை நேர்வழியில் நடப்பவர்களாக நீ ஆக்கியருள்வாயாக! இன்னும் எனக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவரை ஆட்சியாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த ஆட்சியாளராக ஆக்கியருள்வாயாக!
மேலும், ஈராக்கை விட்டும் புறப்படுவதற்கு முன்னாள், காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது பொறுப்பினை முதன்னா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதற்குப் பின்னர் பாரசீக மன்னர் மேலும் துணைப்படைகளை ஈராக்கை நோக்கி அனுப்ப ஆரம்பித்தான். கலீபாவின் உடல்நலக் குறைவின் காரணமாக முதன்னா (ரலி) அவர்கள் தலைநகர் மதீனாவிலிருந்து வரக் கூடிய செய்திகளும், தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் மிகவும் மனமுடைந்து போன முதன்னா (ரலி) அவர்கள் தனது பொறுப்புக்களை பஷீர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மதீனாவை நோக்கிக் கிளம்பினார். அவ்வாறு கிளம்பிய அவர் மதீனாவை அடைந்த பொழுது, அந்த நாள் அபுபக்கர் (ரலி) அவர்களின் இறுதிநாளாக இருந்தது. ஈராக்கின் முழு நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள். உமரே..! நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாள் எனது இறுதி நாளாக இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கின்றேன். நான் பகலில் இறந்தால் வரக் கூடிய மாலை நேரத்திலும் இன்னும் இரவில் இறந்தால் வரக்கூடிய அதிகாலை நேரத்திலும், நீங்கள் முஸ்லிம்களின் படையைத் திரட்டி முதன்னா (ரலி) அவர்களின் உதவிக்கு அனுப்பி வையுங்கள். (நான் இறந்து விடுவதால் ஏற்படுகின்ற) எந்த துக்கமும் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையினின்றும், இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய கடமையினின்றும் உங்களைத் தடுத்து விட வேண்டாம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததை விடவா மிகப் பெரிய துன்பம் ஒன்று இனி ஏற்பட்டு விடப் போகின்றது? அந்த நாளில் நான் செய்த கடமைகளை நீங்கள் அறிவீர்கள். இறைவன் மீது சத்தியமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த அந்த நாளில், என்னிடம் மிகச் சிறிய அளவு பலவீனத்தைக் கூட நான் வெளிப்படுத்தியிருந்திருப்பேன் என்று சொன்னால், கருத்து முரண்பாடு காரணமாக மதீனா நகரமே தீப்பற்றி எறிந்து போயிருக்கும்.
இறைவன் தன்னுடைய அருட்கொடைகளின் மூலமாக சிரியாவில் வெற்றி அளித்து விட்டான் என்று சொன்னால், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீங்கள் மீண்டும் ஈராக்கிற்கு அனுப்பி வைத்து விடுங்கள். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவராவார், அவர் நாட்டின் முழுமையான நிலையையும் சீர்தூக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடக் கூடியவர் என்றும் கூறினார்கள்.
இன்னும் மரணப்படுக்கையில் இருந்து கொண்டிருந்த நிலையிலேயே, அரசின் கருவூலகத்திலிருந்து நான் எவ்வளவு பணத்தை கடனாகப் பெற்றிருக்கின்றேன் என்று கேட்டார்கள். ஆறாயிரம் திர்ஹம்கள் என்று சொல்லப்பட்டது. குறிப்பிட்ட நிலத்தை விற்று அந்த விற்ற பணம் முழுவதையும் கருவூலகத்தில் ஒப்படைத்து விடும்படிக் கூறினார்கள். அதன்படியே அந்த நிலம் விற்கப்பட்டு, முழுத் தொகையும் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தான் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து இதுவரை தனக்காகச் சேர்த்துக் கொண்ட சொத்துக்களின் விபரத்தைக் கேட்டார்கள். அவரது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும், முஸ்லிம்களின் போர்த்தளவாடங்களை மெருகூட்டுவதற்காக பெறப்பட்ட அடிமையும், தண்ணீர் சுமந்து வருவதற்காக வாங்கப்பட்ட ஒட்டகமும், ஒன்றரை ரூபாய் பணத்திற்குப் பெறப்பட்டதொரு துணியும் உள்ளன என்று கூறப்பட்டது. இவை அனைத்தையும் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கின்ற ஆட்சியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். இவையனைத்தையும் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களது முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அழுதவர்களாக.. ஓ..! அபுபக்கர் அவர்களே..! உங்களுக்குப் பின்னாள் ஆட்சிப் பொறுப்புக்கு வரவிருக்கின்றவர்களை நீங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கி விட்டீர்களே..! என்றார்கள்.
இறப்பிற்குச் சற்று முன்னதாக தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஜனாஸாவை எத்தனை துணிகளைக் கொண்டு சுற்றி கபனிடப்பட்டது என்று கேட்டார்கள். மூன்று துண்டுத் துணிகளை வைத்துக் கபனிடப்பட்டது என்று அவர்கள் பதில் கூறிய பொழுது, அதே போன்ற அளவுத் துணிகளைக் கொண்டு என்னைக் கபனிட்டால் போதுமானது என்று கூறினார்கள். அவற்றில் துவைத்து வைக்கப்பட்ட இரண்டு துண்டுகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன, அதனை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்னுமொரு துண்டை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். இதற்கு, என்னுடைய தந்தையே..! புதிய கபன் துண்டுகளை வாங்க இயலாத அளவுக்கு நாம் ஏழைகளாக இருக்கவில்லையே..! என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தனது தந்தையிடம் கூறினார்கள். புதிய ஆடைகளா..! இறந்த மனிதன் புதிய ஆடைகளை அணிவதை விட உயிருள்ளவர்கள் அணிவதே சிறந்தது என்று பதில் கூறினார்கள். இறந்த உடலைச் சுற்றப்பயன்படும் ஆடை அந்த மனிதனின் சலத்தையும், இரத்தத்தையுமே போர்த்திக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தநாளில் மரணமடைந்தார்கள் என்றும் கேட்டார்கள். இதற்கு, 'திங்கட்கிழமை' என்று பதில் கூறப்பட்டதும், நானும் இதே நாளில் மரணமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றேன் என்றார்கள்.
மேலும், தன்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக, இறைவா..! என்னை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக..! இன்னும் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக..! என்றும் பிரார்த்தித்தார்கள். இதுவே, அவர்களது வதனத்திலிருந்து வெளிவந்த இறுதி வார்த்தைகளாகவும் அமைந்தன. அவர்கள் நினைத்தது போலவே, 22, ஜமாதுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை அன்று மக்ரிப் மற்றும் இஷா நேரத்திற்கிடையே மரணமடைந்தார்கள். இன்னா லில்லாhஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது.
ஜனாஸா நல்லடக்கத் தொழுகையை உமர் (ரலி) அவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அன்றைய இரவே ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கு மிக அருகில், தன்னுடைய தலைவருக்கு மிக அருகிலேயே அவரின் உற்ற நண்பரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணமடைந்த பொழுது அவருக்கு 63 வயதாகியிருந்தது.
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள், பதினொரு நாட்கள் கழித்து மரணத்தைச் சந்தித்தார்கள்.

நபி வழியில் நம் துஆக்கள்

கடமையான தொளுகைக்குப்பின் ஓதும் துஆ

أسْتَغْفِرٌاللهَ أسْتَغْفِرٌاللهَ أسْتَغْفِرٌاللهَ اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، ومِنكَ السَّلامُ ، تباركْتَ يَاذا الجلالِ والإكرام
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுகிறேன்(3 முறை) யா அல்லாஹ்! நீயே சாந்தி அளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமானவன். நூல்: 931

لا إلهَ إلاَّ اللَّه وحْدَهُ لا شَرِيكَ لَهُ ، لهُ المُلْكُ ولَهُ الحَمْدُ ، وهُوَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ . اللَّهُمَّ لا مانِعَ لما أعْطَيْتَ ، وَلا مُعْطيَ لما مَنَعْتَ ، ولا ينْفَعُ ذا الجَدِّ مِنْكَ الجدُّ
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.(நூல்: புகாரி 844, 6330)

لا إلَه إلاَّ اللَّه وَحْدَهُ لا شريكَ لهُ ، لهُ الملكُ ولهُ الحَمْدُ ، وهُوَ عَلى كُلِّ شيءٍ قَديرٌ . لا حوْلَ وَلا قُوَّةَ إلاَّ بِاللَّه ، لا إله إلاَّ اللَّه ، وَلا نَعْبُدُ إلاَّ إيَّاهُ ، لهُ النعمةُ ، ولَهُ الفضْلُ وَلَهُ الثَّنَاءُ الحَسنُ ، لا إله إلاَّ اللَّه مُخْلِصِينَ لَهُ الدِّينَ ولوْ كَرِه الكَافرُون
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன்.(பாவத்திலிருந்து திரும்புதலோ நன்மையைச் செய்ய) சக்தியோ அல்லாஹ்வை கொண்டல்லாது இல்லை.வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்.அருட்கொடையும், உயர்வும், அழகிய புகழும் அவனுக்கே.காஃபிர்கள் வெறுத்த போதிலும், முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. (நூல்: முஸ்லிம்)

اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ والْبُخلِ وَأَعوذُ بِكَ مِنْ أنْ أُرَدَّ إلى أرْذَل العُمُرِ وَأعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيا ، وأَعوذُ بِكَ مِنْ فِتْنَةِ القَبر

யா அல்லாஹ்! கோழத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தள்ளாத வயதுவரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.(நூல்: புகாரி 2822)

اللَّهُمَّ أعِنِّي على ذِكْرِكَ ، وشُكْرِكَ ، وَحُسنِ عِبادتِكَ

யா அல்லாஹ்! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!(நூல்: அபூதாவூத்)

سُبْحَانَ الله اَلْحَمْدُ لِلّه اَللهُ أكْبَرْ

சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹ் அக்பர் 33 (மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ் அக்பர் 34 தடவை என்றும் உள்ளது) தடவையும். ஆக மொத்தம் 99 தடவைக்குப்பின் 100 வதாக

لا إلهَ إلاَّ اللَّه وحْدَهُ لا شَرِيكَ لَهُ ، لهُ المُلْكُ ولَهُ الحَمْدُ ، وهُوَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ

எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(நூல்: முஸ்லிம்)
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே.

வீட்டிலிருந்து புறப்படும்போது ஓதும் துஆبِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِِالله

அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது.(நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ)

اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ، أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ

யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன்.(நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜா)

வீட்டினுள் நுழையும்போது ஓதும் துஆ
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا

அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

பிரயாணத்தின்போது ஓதும் துஆسبْحانَ الذي سخَّرَ لَنَا هذا وما كنَّا له مُقرنينَ، وَإِنَّا إِلى ربِّنَا لمُنقَلِبُونَ . اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ في سَفَرِنَا هذا البرَّ والتَّقوى ، ومِنَ العَمَلِ ما تَرْضى . اللَّهُمَّ هَوِّنْ علَيْنا سفَرَنَا هذا وَاطْوِ عنَّا بُعْدَهُ ، اللَّهُمَّ أَنتَ الصَّاحِبُ في السَّفَرِ ، وَالخَلِيفَةُ في الأهْلِ. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وعْثَاءِ السَّفَرِ ، وكآبةِ المنظَرِ ، وَسُوءِ المنْقلَبِ في المالِ والأهلِ وَالوَلدِ

அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.(நூல்: முஸ்லிம் 2392)

பிரயாணத்திலிருந்து திரும்பும்போது ஓதும் துஆآيِبونَ تَائِبونَ عَابِدُون لِرَبِّنَا حَامِدُونَ

யாஅல்லாஹ்! இதில் நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.(நூல்: முஸ்லிம் 1496)

கழிவரையில் நுழைகின்றபோதுبِسْمِ الله ) اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث )
யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி, முஸ்லிம்

கழிவரையிலிருந்து வெளியேறுகின்றபோது
غُفْـرانَك
உன்னிடம் பாவம் பொருத்தருள வேண்டுகிறேன். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
உளுச் செய்தபின்
أَشْهدُ أَنْ لا إِله إِلاَّ اللَّه وحْدَه لا شَريكَ لهُ، وأَشْهدُ أَنَّ مُحمَّدًا عبْدُهُ وَرسُولُه

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்

اللَّهُمَّ اجْعلْني من التَّوَّابِينَ واجْعلْني مِنَ المُتَطَهِّرِينَ

யாஅல்லாஹ் பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ

பள்ளிவாசலுக்குள் நுழையும்போது
أَعوذُ باللهِ العَظيـم وَبِوَجْهِـهِ الكَرِيـم وَسُلْطـانِه القَديـم مِنَ الشّيْـطانِ الرَّجـيم،[ بِسْـمِ الله، وَالصَّلاةُ] [وَالسَّلامُ عَلى رَسولِ الله]، اللّهُـمَّ افْتَـحْ لي أَبْوابَ رَحْمَتـِك. رواه ابو داود
யா அல்லாஹ்! உனது அருள் வாசல்களை எனக்காக திறப்பாயாக!

பள்ளிவாசல் விட்டு வெளியேறும்போது
بِسمِ الله وَالصّلاةُ وَالسّلامُ عَلى رَسولِ الله، اللّهُـمَّ إِنّـي أَسْأَلُكَ مِـنْ فَضْـلِك، اللّهُـمَّ اعصِمْنـي مِنَ الشَّيْـطانِ الرَّجـيم. رواه مسلم وابن ماجه
யா அல்லாஹ்! நிச்சயமாக உனது பேரருளை வேண்டுகிறேன். நூல்: முஸ்லிம்

எனக்கு ஒரு நண்பன் இருந்தான்

சுவனவாசிகளில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.

(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.

''நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?'' என்றும் கேட்டான்.)

(அவ்வாறு கூறியவனை) ''நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?'' என்றும் கூறுவார்.

அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.

(அவனிடம்) ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!

''என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.

''(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?

''(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்'' என்று கூறுவார்.

நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.

எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
(அல்குர்ஆன் 37:51-61)
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?'' எனக் கூறுவான்.

''எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?''

''நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான!'' (என்று புலம்புவான்.)
(அல்குர்ஆன்: 25:27-29)
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.
(அல்குர்ஆன்:43:67)
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.

இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

எதுவரை யென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); ''ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!'' (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்'' என்று கூறுவான்.

(அப்போது) ''நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்'' (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
(அல்குர்ஆன்:43:36-39)
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.


எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.

(அல்குர்ஆன்:44:41-42)

(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.


அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்).

(அல்குர்ஆன்:70:10-11)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். (ஆதாரம் : அபூதாவூது).

மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் சிறப்பு..

ஃபழாலா இப்னு உபைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ''உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும்! பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்'' என்று கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ)( ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூ முஹம்மத் என்ற கஹ்ப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு ஸலாம் எப்படிக் கூறுவது?'' என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது? என்று கேட்டோம் ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்! அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்'' என்று கூறுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஸலவாத்தின் பொருள்: இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக! நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய். (ரியாளுஸ்ஸாலிஹீன்)

Sunday, October 12, 2008

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'சொர்க்கத்தில் மக்களை நுழையச் செய்வதில் மிக அதிகமானவை எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இறையச்சமும், நற்குணமும்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நரகத்தில் மக்களை அதிக அளவில் நுழையச் செய்வது எது? என்று கேட்கப்பட்டது. ''நாவும், மறைவுறுப்பும் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 627)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மூஃமின்களில் இறைநம்பிக்கையில் முழுமையானவர், அவர்களில் குணத்தால் மிக அழகியவராவார். தங்களின் மனைவியரிடம் சிறந்தவர் தான் உங்களில் சிறந்தவர் ஆவார்.'' ஏன்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 628)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நிச்சயமாக ஒரு மூஃமின், தன் அழகிய குணத்தின் காரணமாக, நின்று வணங்கி நோன்பு நோற்கக் கூடியவரின் தகுதியை அடைவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 629)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் ஆவான். ஒவ்வொரு காரியங்களிலும் அவன் மென்மையையே விரும்புகிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 633)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மென்மை, இடம்பெறுகின்ற எந்தக் காரியமும், அது அழகாக்கி விடுகிறது. மேலும் அது இடம் பெறாத எதுவும், சேதப்படுத்தி விடுகிறது'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 635)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடக்காதீர்கள். (மக்களை) வாழ்த்துங்கள். (அவர்களை) வெறுக்காதீர்கள்.'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 637)

நபிமொழி

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நிச்சயமாக அல்லாஹ், மறுமை நாளில், ''ஆதமின் மகனே! நான் நோயாளியாக இருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?'' என்று கேட்பான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது?'' என்று மனிதன் பதில் அளிப்பான். ''என் அடியான் இன்னவன் நோயாளியாக இருந்தான். அவனை நீ விசாரிக்கவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனின் நோய் பற்றி விசாரித்திருந்தால், அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று அல்லாஹ் கூறிவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்தேன். எனக்கு நீ உணவு தரவில்லையே!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு எப்படி உணவளிப்பேன்?'' என்று மனிதன் கேட்பான்.

''என் அடியான் இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டு வந்து, அவனுக்கு நீ உணவு தரவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனுக்கு உணவு தந்திருந்தால்,அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று இறைவன் கேட்டுவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். எனக்கு நீ குடிக்கத் தரவில்லை!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு நான் எப்படி குடிக்கத் தருவேன்'' என்று மனிதன் கேட்பான். ''என் இன்ன அடியான் உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ குடிக்கத் தரவில்லை. நீ அவனுக்கு குடிக்கத் தந்திருந்தால், அதை என்னிடம் (இன்று) நீ பெற்றிருப்பாய் என்பதை அறியவில்லையா? என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 896)

அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நோயாளியை நலன் விசாரியுங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். அடிமையை விடுவியுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 897)

ஸவ்பான் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒரு முஸ்லிம், தன் முஸ்லிமான சகோதரனை நலன் விசாரித்தால், அவனிடமிருந்து அவன் பிரியும் வரை சொர்க்கத்தின் 'குர்ஃபத்'ல் இருந்து கொண்டிருப்பான்'' என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தின் ''குர்ஃபத்'' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது ''சொர்க்கத்தின் பழம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 898

Thursday, October 9, 2008

அல்லாஹ்வின் திருத்தூதரை நேசிப்பது


அல்லாஹ்வின் திருத்தூதரை ஒருவரின் குடும்பம் பிள்ளைகள், தந்தை பிற மனிதர்கள் ஆகியோரைக் காட்டிலும் அதிகம் நேசிப்பது.

27- நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள் ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும் வரை அவர்(உண்மையான)ஈமான் கொண்டவர் ஆகமாட்டார். புகாரி-15: அனஸ்(ரலி)


ஈமான் கொண்டவர் அதன் சுவையை உணர்தல்

26- எவரிடம் மூன்று தன்மைகளக் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுமையை உணர்ந்தவராவார்(அவை)அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-16: அனஸ்(ரலி)


இஸ்லாத்தில் சிறந்தது எது? காரியங்களில் சிறந்தது எது?

24- ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், (பசித்தோருக்கு)நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்று கூறினார்கள்.புகாரி-12: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

25- அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்)சொன்னார்கள், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரது செயலே சிறந்தது. புகாரி-11: அபூ மூஸா(ரலி)

Saturday, October 4, 2008

இரட்டை ஹிஜ்ரத் வாசிகள்.

1627. நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டு விட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூ ருஹ்கி ஆவார். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் இப்னு அபீ மூஸா (ரஹ்) கூறினார்: ''என்னுடைய (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்'' என்றோ 'ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம் என்றோ (என் தந்தை அபூ மூஸா (ரலி)) கூறினார்கள். நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கி விட்டது. (அபிசினியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்னெவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, 'உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம்'' என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அஸ்மா அவர்களைக் கண்டபோது, 'இவர் யார்?' என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். '(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்'' என்று ஹஃப்ஸா (ரலி), 'இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்'' என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி), 'உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில்... அல்லது பூமியில்... இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவு மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்'' என்று கூறினார்கள். 'அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்'' என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4230-4231 அபூ மூஸா (ரலி).

அன்ஸாரிகளின் சிறப்புகள்.


1628. ''(உஹதுப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்...'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:122-ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், 'அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்'' என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான்.
புஹாரி : 4051 ஜாபிர் (ரலி).


1629. அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக'' என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.
புஹாரி: 4906 மூஸாபின் உக்பா (ரலி).


1630. (அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்'' ஒரு மணவிழாவிலிருந்து வருவதை'' என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நின்று கொண்டு, 'இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
புஹாரி : 3785 அனஸ் (ரலி).


1631. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று இரண்டு முறை கூறினார்கள்.
புஹாரி : 3786 அனஸ் (ரலி).


1632. ''அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்து போய் விடுவார்கள். எனவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3801 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

அன்ஸாரிகளில் சிறந்தோர்.


1633. ''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் எனக் காண்கிறேன்'' என்று கூறினார்கள். அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறினார்கள்'' என்று சொல்லப்பட்டது.
புஹாரி :3789 அபூஉஸைத் (ரலி).

1634. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னை விட வயதில் பெரியவராக இருந்தும் எனக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். ('வேண்டாம்' என நான் மறுத்த போது) 'அன்சாரிகள் ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை பார்த்திருக்கிறேன்; எனவே, அவர்களில் எவரை நான் கண்டாலும் (அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை'' என்று ஜரீர் (ரலி) கூறினார்.
புஹாரி : 2888 அனஸ் (ரலி).

1635. அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! கிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 3514 அபூஹூரைரா (ரலி).

1636. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, 'கிஃபார்' குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! 'அஸ்லம்' குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! 'உஸைய்யா' குலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3513 இப்னு உமர் (ரலி).

1637. குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3504 அபூஹுரைரா (ரலி).

1638. அஸ்லம், கிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலங்களில் சிலரும் - அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும் அல்லாஹ்விடம் அல்லது மறுமை நாளில் அஸத், தமீம், ஹவாஸின் மற்றும் கத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3516 அபூ ஹுரைரா (ரலி)

1639. அக்ராஉ இப்னு ஹாபிஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், 'தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர்களான அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தாம்'' என்று கூறினார்கள். 'மற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்' என்றும் (நபியவர்கள் கூறினார்கள் என) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு அபீ யஅகூப் சந்தேகத்துடன் கூறுகிறார். நபி (ஸல்) அவர்கள், 'பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத், மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய குலங்களை விட அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ இப்னு ஹாபிஸ் (ரலி), 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (அஸ்லம், கிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தினரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத் மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய) அவர்களை விடச் சிறந்தவர்களே'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3516 அபூபக்ரா (ரலி).

1640. துஃபல் இப்னு அம்ர் அத்தவ்ª (ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) 'தவ்ஸ்' குலத்தார் மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, 'தவ்ஸ் குலத்தார் அழியட்டும்'' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 2937 அபூஹூரைரா (ரலி).

1641. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், 'அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் உம்மத்தினரிலேயே அதிகக் கடுமையுடன் தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தருமப் பொருள்கள் வந்தபோது இறைத்தூதர், 'இவை எங்கள் இனத்தாரின் தருமப் பொருள்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூ தமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2543 அபூஹூரைரா (ரலி).

1642. மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3493-3494 அபூஹுரைரா (ரலி)

குறைஷிப் பெண்களின் சிறப்பு.

1643. குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள் .இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பின்பு, 'இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3434 அபூஹூரைரா (ரலி).

1644. ''இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?' என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 2294 ஆஸிம் (ரலி).

Monday, September 29, 2008

அபூமூஸா (ரலி) அபூஆமிர் (ரலி) சிறப்புகள்..

1623. மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே 'ஜிஃரானா' என்னுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் - அவர்களிடம்) வந்து, 'நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'நற்செய்தியைப் பெற்றுக் கொள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லி விட்டீர்களே!'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். 'இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், 'நாங்கள் ஏற்றுக் கொண்டோம்'' என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் பிறகு (எங்களிடம்), 'இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, 'உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, '(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.
புஹாரி : 4328 அபூமூஸா (ரலி).

1624. நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அபூ அமீர் அவர்களை (தளபதியாக்கி) 'அவ்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) 'துரைத் இப்னு ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களின் முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, 'என் தந்தையின் சகோதரரே! உங்களின் மீது அம்பெய்தவன் யார்?' என்று கேட்டேன். 'என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!'' என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, '(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?' என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), 'உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்'' என்று கூறினேன். பிறகு, (''என்னுடைய முழங்காலில் பாய்திருக்கும்) இந்த அம்மைப் பிடுங்கியெடு'' என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. 'என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு'' என்று அபூ ஆமிர் (ரலி) கூறினார். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமீர் (ரலி) (வீர) மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தங்களின் வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும், அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, 'இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன். உடனே நான், 'எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இறைவா! அப்துல்லாஹ் இப்னு கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அபூபுர்தா (ரலி) கூறினார்: (நபி - ஸல் - அவர்கள் புரிந்த இரண்டு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூ அமீர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.
புஹாரி : 4323 அபூமூஸா (ரலி).

1625. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும்போது அவர்கள் குர்ஆன் ஒதும் ஒசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான்பார்த்திருக்கா விட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார் அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அல்லது எதிரிகளைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றார் என்று (துணிவோடு) கூறுவார் என்று கூறினார்கள்.
புஹாரி : 4232 அபூமூஸா (ரலி).

1626. அஷ்அரீ குலத்தினரின் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2486 அபூமூஸா (ரலி).

Saturday, September 27, 2008

நபித்தோழர் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்களின் சிறப்பு.

1622. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு'' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று கூறினாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்'' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்'' என்றார்கள்.
புஹாரி : 3007 அலீ(ரலி).

Wednesday, September 24, 2008

தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -“யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்” (அல்-குர்ஆன்).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தங்கம், மற்றும் வெள்ளியின் உரிமைகளை (ஜகாத்தை) நிறைவேற்றாதவனுக்கு மறுமை நாளில், அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்ட பாளங்களாக மாற்றப்பட்டு அதன் மூலம் அவனது முகத்திலும், விலாப்புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும். அந்நெருப்புப் பாளங்கள் குளிர்ந்து விடும் போதெல்லாம் மீண்டும் சூடேற்றப்படும். (மறுமையின்) அந்நாள்(இம்மையின்) ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம், நஸாயி.

யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.” இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். (ஆதாரம்: புகாரி)

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

அல்லாஹ் நம்மனைவரையும் ஜகாத்தை முறைப்படி கொடுத்து வரக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

Article taken from சுவனத்தென்றல் ---நன்றி

Saturday, September 20, 2008

புனித ரமளானின் இறுதிப் பத்தில் ஓர் இனிய பிரார்த்தணை



இந்தப் புனித ரமளானில் தினமும் இறைஞ்சுவதற்குப் பொருத்தமான இந்தப் பிரார்த்தணை, சங்கைக்குரிய கமாலுத்தீன் மதனி அவர்கள் தொகுத்த ஹஜ் உம்ரா சியாரத் வழிகாட்டி என்னும் சிற்றேட்டிலிருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டது. மொழி நடையில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரார்த்தணை
யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! எனது உடலிலும், கேள்வியிலும் பார்வையிலும் ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக. வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. இறை நிராகரிப்பு, ஏழ்மை, மண்ணறை வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை.


யா அல்லாஹ்! நீயே என்னைப் படைத்து பரிபாலிப்பவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. என்னால் இயன்றவரை உனக்களித்த வாக்குறுதியையும், உன்னுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தையும் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கிறேன். நான் செய்த தீங்கிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன்.எனக்கு சகல சௌபாக்கியங்களையும் அருளினாய் என நான் ஒப்புக் கொள்கிறேன். என் பாவத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவே எனது பாவத்தை மன்னித்தருள்வாயாக. பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், முதலியவற்றிலிருந்தும், கடன் அதிகரிப்பதை விட்டும், மனிதர்கள் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! இன்றைய தினத்தின் ஆரம்பத்தை நலவானதாகவும், பகுதியை வெற்றியானதாகவும், இறுதியை ஜெயமானதாகவும் ஆக்கியருள்வாயாக. ஈருலகிலும் நல்லவற்றைத் தருவாயாக. மரணத்திற்குப்பின் நல்வாழ்வையும். சங்கைக் குரிய உன் திருமுகத்தைக் கண்டு மகிழும் பாக்கியத்தையும், எவ்வித தங்கடங்கள் குழப்பங்களின்றி உன்னைச் சந்திக்கும் பெரும் பேற்றையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன்.


யா அல்லாஹ்! நான் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்தும், பிறரால் அநீதி இழைக்கப் படுவதிலிருந்தும், பிறரை நான் தாக்குவதிலிருந்தும், பிறர் என்னைத் தாக்குவதிலிருந்தும், தவறைச் சம்பாதிப்பதிலிருந்தும், மன்னிக்கப்படாத பாவத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! சோதனையான முதுமையை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன். நற்குணங்களின் பக்கம் எனக்கு வழிகாட்டுவாயாயக. அவற்றில் நல்லவற்றைக் காண்பிப்பவன் உன்னைத் தவிர யாருமில்லை. தவறான செயல்கள், தவறான குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. தவறுகளை விட்டும் காப்பாற்றக் கூடியவன் உன்னைத் தவிர யாருமில்லை.
யா அல்லாஹ்! எனது மார்க்கத்தைச் சீர்ப்படுத்துவாயாக. எனது இருப்பிடத்தை விசாலப் படுத்துவாயாயக. எனது ரிஜ்கில் பரக்கத்தை ஏற்படுத்துவாயாக. முரட்டுத்தனம், பொடுபோக்கு, இழிவு முதலிய கெட்ட குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக.


யா அல்லாஹ்! செவிடு, ஊமை, குஷ்டம், கொடு நோய், முதலியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். எனக்கு இறையச்சத்தைத் தந்து என்னைத் தூய்மைப் படுத்துவாயாக. தூய்மைப்படுத்துபவர்களில் நீயே சிறந்தவன். நீயே எனது அதிபதி.


யா அல்லாஹ்! பயனற்ற கல்வி, பயமற்ற உள்ளம், நிறவைடையா மனம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, ஆகியவற்றிலிருந்தும், நான் செய்த தீங்கு, செய்யாத தீங்கு, நான் அறிற்து செய்த பிழைகள், அறியாமல் செய்த பிழைகள், அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்!நீ எனக்கருளிய அருட்கொடைகளும், ஆரோக்கியமும், என்னை விட்டுப் போய்விடுவதை விட்டும், திடீரென வரும் உன் வேதனைகளை விட்டும், உன்னுடைய எல்லாக் கோபங்களை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! கட்டடங்கள் இடிந்து விழுதல், தவறிவிழுதல், தண்ணீரில் மூழ்குதல், நெருப்பில் கரியுதல், இயலாத முதுமை, ஆகியவற்றிலிருந்தும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை வழி கெடுப்பதை விட்டும், கொடிய விஷப் பிராணிகள் கொட்டி மரணமடைவதிலிருந்தும், இழுக்களவில் கொண்டு சேர்க்கும்படியான பேராசையை விட்டும், கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள், கெட்ட நோய்கள், கெட்ட எண்ணங்கள், ஆகியவற்றவை விட்டும், கடன் அதிகரிப்பதை விட்டும், எதிரிகளின் ஆதிக்கத்தை விட்டும், எங்களுக்கு ஏற்படும் தங்கடங்கள் மீது எதிரிகள் மகிழ்ச்சியடைவதை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! எனது செயல்களில் பாதுகாப்பாக எனது மார்க்கத்தையும், பிழைப்பிருக்கும்படியாக எனது இம்மை வாழ்வையும், நான் திரும்பச் செல்லவிருக்கும் எனது மறுமை வாழ்வையும், சீர்படுத்துவாயாக! நன்மையான செயல்களை அதிகம் செய்யும்படியாக எனது வாழ்க்கையையும், அனைத்துத் தீமைகளை விட்டும் நிவர்த்தியானதாக எனது மரணத்தையும், ஆக்கியருள்வாயாக. என்னைப் படைத்தவனே எனக்கு ஆதரவாக உதவியளி, எதிராக உதவாதே. எனக்கு சாதகமாக ஆதரவளி, பாதகமாக ஆதரவளிக்காதே. எனக்கு நேர்வழி காட்டி அவ்வழியை எளிதாக்கியருள்வாயாக.


யா அல்லாஹ்! உன்னை அதிகம் நினைக்கக் கூடியவனாகவும், அதிகம் வழிப்படக் கூடியவனாகவும், அதிகம் அஞ்சக் கூடியவனாகவும், உன் பக்கமே அதிகம் மீள்பனாகவும் என்னை ஆக்கியருள்வாயாக.


யா அல்லாஹ்! பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக. என் பாவத்தைத் தூய்மைப் படுத்துவாயாக. எனது பிரார்த்தணைக்கு பதிலளிப்பாயாக. என்னுடைய ஆதாரத்தை உறுதிபெறச் செய்வாயாக. எனது உள்ளத்தை நேர்வழிப்படுத்துவாயாக. எனது நாவை உறுதியாக்குவாயாக. பொறாமை நெஞ்சில் குடி கொள்வதை விட்டும் என்னை அப்பாற்படுத்துவாயாக.


யா அல்லாஹ்! என்னுடைய செயல்களில் நான் நிலைபட்டிருப்பதையும், நேர் வழியில் நான் உறுதியுடன் இருப்பதையும், உன்னிடம் கேட்கிறேன். நீ எனக்கு அருளிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி உன்னை நன்முறையில் வணங்கக் கூடியவனாக என்னை ஆக்கிவைப்பாயாக.


யா அல்லாஹ்! குறையற்ற உள்ளத்தையும், உண்மை பேசும் நாவையும், தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ நன்மை என அறிந்த அனைத்தையும் தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ தீமை என அறிந்த அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன். நீ அறிந்த அனைத்திலும் பிழை பொறுக்கத் தேடுகிறேன். மறைவானவற்றை நீயே நன்கறிந்தவன்.


யா அல்லாஹ்! நேர் வழியில் செல்ல எனக்கு மன உதிப்பைத் தருவாயாக. எனது ஆன்மாவின் தீங்கை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. நல்லவற்றை செய்வதையும், தீயவற்றை விடுவதையும், ஏழைகளை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன். பாவ மன்னிப்பை உன்னிடம் கேட்கிறேன். உனது அடியார்களைச் சோதிக்க நீ நாடினால் அச்சோதனையில் நான் சிக்காமல் என்னை மரணிக்கச் செய்வாயாக.


யா அல்லாஹ்! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போர் நேசத்தையும், உனது நேசத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் அனைத்து செயல்களையும் நேசிப்பதையும், உன்னிடம் கேட்கிறேன்.


யா அல்லாஹ்! நல்ல கேள்வியையும், நல்ல துஆவையும், நல்ல வெற்றியையும், நற்கூலியையும் எனக்குத் தந்தருள்வாயாக. என்னை நிலையானவனாக ஆக்கி, எனது நன்மையின் எடையை அதிகரிப்பாயாக. எனது ஈமானை முழுமைப்படுத்துவாயாக. சுவனத்தில் எனது தரத்தை உயர்த்துவாயாக. எனது தொழுகைகளை ஏற்றுக் கொள்வாயாக. எனது தவறுகளை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்ந்த பதவியைத் தருவாயாக.


யா அல்லாஹ்! நற்செயல்களின் திறவுகோலையும், அதன் நல்ல துவக்கத்தையும், நல்ல முடிவையும், அக புற நன்மைகள் அனைத்தையும் உன்னிடம் கேட்கிறேன். சுவனத்தில் உயர்ந்த பொறுப்புகளைத் தருவாயாக.


யா அல்லாஹ்! எனது சிறப்பை உயர்த்துவாயாக. பாவத்தை விட்டுவிடுவாயாக. என் உள்ளத்தை; தூய்மைப் படுத்துவாயாக. எனது வெட்கத்தலங்களைப் பாதுகாப்பாயாக. எனது பாவங்களை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்பதவியைத் தருவாயாக. என்னுடைய கேள்வி, பார்வை, ஆத்மா, தோற்றம், குணம், அனைத்திலும் பரக்கத் செய்லாயாக.


யா அல்லாஹ்! எனது குடும்பம், எனது வாழ்க்கை, எனது அறிவு ஆகிய அனைத்திலும் பரக்கத் செய்வாயாக. எனது நற்செயல்களை அங்கீகரித்து சுவனத்தில் உயர் பதவியைத் தருவாயாக.உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலக்கச் செய்வாயாக. உள்ளங்களையும் பார்வைகளையும் திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உன்னை வழிபடுவதன் பக்கம் திருப்புவாயாக. நன்மையைக் குறைக்காமல் அதிகம் தருவாயாக. இழிவு படுத்தாமல் எங்களை சங்கைப் படுத்துவாயாக. இல்லை எனச் சொல்லாமல் தருவாயாக. குறைவின்றிக் கொடுப்பாயாக.


யா அல்லாஹ்! எங்கள் அனைத்துக் காரியங்களின் முடிவையும் நல்முடிவாக்குவாயாக. இம்மையின் இழிவை விட்டும், மறுமையின் வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்களுக்கும் எங்கள் பாவங்களுக்கும் இடையில் சுற்றி வரும் உள்ளச்சத்தை எங்களுக்குத் தருவாயாக. உனது சுவனத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் உன் வழிபாட்டை எங்களுக்குத் தருவாயாக.


யா அல்லாஹ்! எங்கள் கேள்விகளிலும் எங்கள் பார்வைகளிலும், எங்கள் சக்திகளிலும் சுகத்தைத் தருவாயாக. எங்களுக்கு அநீதி இழைத்தவர்களிடம் நீ பழிக்குப் பழி வாங்குவாயாக. எங்கள் பகைவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக. உலகத்தை எங்கள் முக்கிய நோக்கமாகவும், அதற்காகவே வாழக்கூடியவர்களாகவும் எங்களை ஆக்கிவிடாதே. எங்கள் சோதனைகளை எங்கள் மார்க்கத்தில் ஆக்கிவிடாதே. நாங்கள் செய்த பாவங்களின் காரணமாக உன்னை அஞ்சாதவனையும், கருணையில்லாதவனையும் எங்கள் மீது சாட்டிவிடாதே.

யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அனைத்தையும், உனது மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளத் தேவையான மன உறுதியையும் உன்னிடம் கேட்கிறேன். அனைத்து நன்மைகளையும் கனீமத்தாகத் தந்து அனைத்து தீமைகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. சுவனம் கிடைத்து வெற்றி பெற்றவனாகவும், நரகத்தை விட்டு விடுதலை பெற்றவனாகவும் என்னை ஆக்குவாயாக.

கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாகிய இறைவனே! எங்கள் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. எங்கள் எந்தக் குறையையும் மறைக்காமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கவலையையும் சந்தோஷப்படுத்தாமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கடனையும் நிறைவேற்றாமல் வைத்து விடாதே. எங்களுக்குப் பயனுள்ள ஈருலக எந்தத் தேவைகளையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே.

யா அல்லாஹ்! என் இதயத்திற்கு நேர் வழி காட்டும்படியான அருளை, சிதறுண்டுக் கிடக்கும் என் செயல்களை ஒன்று சேர்க்கும்படியான அருளை, என்னிடமிருந்து மறைந்து போனவற்றை பாதுகாக்கும்படியான அருளை, என் முன்னுள்ளவற்றை உன்னளவில் உயர்த்திக் கொள்ளும்படியான அருளை, என் முகத்தை வெண்மையாக்கும்படியான அருளை, எனது அறிவைத் தூய்மைப்படுத்தும் படியான அருளை, எனக்கு நேர்வழி காட்டி என்னை விட்டும் பித்னாக்ளை அப்புறப்படுத்தும்படியான அருளை, அனைத்துத் தீய செயல்களை விட்டும் என்னைப் பாதுகாக்கும்படியான அருளை உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! நியாயத் தீர்பட்பு நாளில் வெற்றியையும், நல்லோர்கள் வாழ்வையும், உயிர்த்தியாகிகள் இருப்பிடத்தையும், நபிமார்களின் தோழமையையும், எதிரிகளுக்குக் கேடாக எனக்கு வெற்றியையும் உன்னிடம் கேட்கிறேன். சரியான ஈமானையும், நற்குணத்தில் நம்பிக்கைகையயும் வெற்றிமேல் வெற்றியையும் எனக்குத் தந்தருள்வாயாக.


யா அல்லாஹ்! உனது அருட் கொடையையும், ஆபியத்தையும், பாவமன்னிப்பையும், விருப்பத்தையும், ஆரோக்கியத்தையும், பத்தினித்தனத்தையும், நற்குணத்தையும், உனது தீர்ப்பைப் பொருந்திக் கொள்ளும் உள்ளத்தையும். உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! என் நப்ஸின் தீங்கிலிருந்தும், உனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அனைத்து உயிர்ப்பிராணிகளின் தீங்கிலிருந்தும், உன்னிடம் காவல் தேடுகிறேன். (எனது நாயனாகிய நீயே) நேர் வழியில் நடத்துபவன்.


யா அல்லாஹ்! எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். நான் இருக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். என் இரகசியத்தையும், பரகசியத்தையும் நீயே அறிந்தவன். உனக்குத் தெரியாமல் என் செயல்களில் எதுவும் இல்லை. நானோ பரம ஏழையாகவும் தேவையுடையவனாகவும் தஞ்சம் நாடி அபயம் கோரக் கூடியவனாக உள்ளேன். உன்னை அஞ்சி பயந்து நான் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டு மிஸ்கீன்கள் கேட்பது போல் கேட்கிறேன். பார்வை இழந்தவன் பயந்து உன்னை அழைத்துக் கேட்பது போல் கேட்கிறேன். கேவலமான பாவி இறைஞ்சுவது போல் இறைஞ்சிக் கேட்கிறேன். தலைதாழ்த்தி தன்னையே உனக்கு அர்ப்பணித்தவனாக உன்னிடம் இறைஞ்சுகிறேன். எனது பிரார்த்தணைகளை அங்கீகரிப்பாயாக.
ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டவதாக.

நன்றி...http://masdooka.wordpress.com

தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்

1563. நபி (ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை. இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) தல்ஹா (ரலி) மற்றும் ஸஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.
புஹாரி : 3723 அபூஉஸ்மான் (ரலி).


1564. அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி), 'நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)'' என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்க, ஸுபைர் (ரலி), 'நான்'' என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்'' என்று கூறினார்கள்.
புஹாரி: 2846 ஜாபிர் (ரலி)


1565. அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் (நபி - ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு... அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, 'என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்'' என்று சொன்னேன். அவர்கள், 'என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!'' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (பார்த்தேன்)'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, 'என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3720 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி).

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. 'என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை'' என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
புஹாரி : 3035-3036 ஜரீர்(ரலி).



1609. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்து விட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 3020 ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஜைனப் (ரலி) ,ஜைது பின் ஹாரிதா (ரலி) உஸாமா பின் ஜைது (ரலி) சிறப்புகள்.

ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு

1595. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?' எனக் கேட்டதற்கு, 'உங்களுள் கை நீளமானவரே!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஜைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஜைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால் தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.
புஹாரி :1420 ஆயிஷா (ரலி).


ஜைது பின் ஹாரிதா (ரலி) உஸாமா பின் ஜைது (ரலி) சிறப்புகள்.

1570. ''வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
புஹாரி : 4782 இப்னு உமர் (ரலி).


1571. நபி (ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், '(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்... (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3730 இப்னு உமர் (ரலி).

அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1556. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4416 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).


1557. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்'' என்று கூறக் கேட்டேன். உடனே, நபித் தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர் பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அலீ எங்கே?' என்று கேட்டார்கள். 'அவருக்குக் கண்வலி'' என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. உடனே, அலீ (ரலி), 'நம்மைப்போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்றார்கள்.
புஹாரி : 2942 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).


1558. அலீ (ரலி) கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. 'நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ, 'அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்'' என்றோ அல்லது, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ சொல்லிவிட்டு, 'அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்'' என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், 'இதோ, அலீ அவர்கள்!'' என்று கூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.
புஹாரி : 2975 ஸலமா பின் அக்வஹ் (ரலி).


1559. நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலி (ரலி)யை காணவில்லை. உன் பெரிய தந்தையின் மகன் எங்கே? என்று ஃபாத்திமா (ரலி)விடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது: கோபித்துக் கொண்டு சென்று விட்டார். என்னிடம் தங்கவில்லை என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர் எங்கே என்று பார்த்து வாரும்! என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது அலி (ரலி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டு மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்! எனக் கூறினார்கள்.
புஹாரி : 441 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) மற்றும் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களின் சிறப்பு ...


1606. உஹதுப் போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன். எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்தனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாவை தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (ஜனாஸா) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'யார் அந்தப் பெண்?' என வினவினார்கள். அம்ர்டைய மகள் என்றோ அல்லது அம்ர்டைய சகோதரி என்றோ (கூடியிருந்தோர்) கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'நீ ஏன் அழுகிறாய்? நீ அழுதாலும் அழாவிட்டாலும் ஜனாஸா உயர்த்தப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்'' என்றார்கள்.
புஹாரி : 1293 ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி).



அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு



1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.
புஹாரி : 3763 அபூமூஸா (ரலி).



1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.
புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி).



1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5002 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்).



1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3758 மஸ்ரூக் (ரலி).

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) அவர்களின் சிறப்பு

1572. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள். உங்களை விட்டு விட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3082 இப்னு அபீ முலைக்கா (ரலி).


அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்


1566. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3744 அனஸ் (ரலி).


1567. நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், 'நம்பத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்'' என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த 'அமீன்' என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
புஹாரி : 3745 ஹூதைஃபா (ரலி

அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்களின் சிறப்பு

1607. அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரிடம், 'இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, 'வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!'' என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு, அபூதர்ரிடம் திரும்பிச் சென்று, 'அவர் நற்குணங்களைக் கைக் கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை பார்த்தேன். ஒரு வாக்கையும், (செவியுற்றேன்) அது கவிதையாக இல்லை'' என்று கூறினார். அபூதர், 'நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை'' என்று கூறிவிட்டு, பயண உணவு எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தன்னுடைய தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூதர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றனர். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ - ரலி - அவர்கள் அபூதர்ரிடம், 'வீட்டுக்கு வாருங்கள்'' என்று சொல்ல) அபூதர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும்வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவரைக் கடந்து சென்றார்கள். 'தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா?' என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியம் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ (ரலி) அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), 'நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?' என்று கேட்டார்கள். அவர், '(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்'' என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி), 'அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் இறைத்தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகிற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள்'' என்று கூறினார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலி அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி), நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீங்கள் உங்கள் (கிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள். அபூதர், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இச்செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்'' என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) என்றும் உறுதி சொல்கிறேன்'' என்று கூறினார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) வந்து, அவரின் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். 'உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும்வழி (கிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?' என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவரின் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போன்றே) அப்பாஸ் (ரலி) அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்தார்கள்.
புஹாரி : 3861இப்னு அப்பாஸ்(ரலி).

உம்மு ஸலமா (ரலி) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு..

1594. நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா (ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா (என்ற நபித்தோழர்)'' என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்'' என்று உம்மு ஸலமா - ரலி - அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா (ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்று எனக்குத் தெரிய வந்தது)'' என்று கூறினார்கள்.நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்களிடம், 'யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3633 அபூஉஸ்மான் (ரலி).


உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு..



1596. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, 'நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்'' என்றார்கள்.
புஹாரி : 2844 அனஸ் (ரலி).

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்

1573. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 3432 அலீ (ரலி).



1574. ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3411 அபூ மூஸா (ரலி).



1575. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி).



1576. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி கூறினார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3819 இஸ்மாயீல் (ரலி).



1577. கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.
புஹாரி : 3818 ஆயிஷா (ரலி).



1578. ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன்.
புஹாரி: 3821 ஆயிஷா (ரலி).

ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்


1560. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, 'என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், 'யாரது?' என்று கேட்டார்கள். வந்தவர், 'நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.
புஹாரி : 2885 ஆயிஷா (ரலி).


1561. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறியதை கேட்டேன்.
புஹாரி : 2905 அலீ (ரலி).


1562. ''(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனச்) கூறினார்கள்'' என்று ஸஅத் (ரலி) சொல்ல கேட்டேன்.
புஹாரி : 3725 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்

1568. நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் விட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். 'இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?' என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹஸன் (ரலி)) ஓடிவந்தார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். 'இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2122 அபூஹூரைரா (ரலி).


1569. அலீ (ரலி) அவர்களின் மகன் ஹஸன் (ரலி), நபி (ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!'' என்று பிரார்த்திக்கக் கண்டேன்.
புஹாரி : 3749 அல்பராஉ (ரலி).

Wednesday, September 17, 2008

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு ..

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு ..
1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1604. (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3802 அல்பராஉ (ரலி).

1605. நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2615 அனஸ் (ரலி

Monday, September 15, 2008

உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு..

உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு..

1601. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் தாம் அவர்கள்'' என்று அனஸ் (ரலி) கூறினார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3810 அனஸ் (ரலி).

1602. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, 'வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..'' என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), 'என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.
புஹாரி : 3809 அனஸ் (ரலி).

அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு..

அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு..

1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.
புஹாரி : 3763 அபூமூஸா (ரலி).

1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.
புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி).

1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5002 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்)

.1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3758 மஸ்ரூக் (ரலி).