Thursday, December 25, 2008
மறுமை நாளில் மனிதர்களின் நிலை
புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).
1818. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின் வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104). மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப்பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்பேன். அப்போது அல்லாஹ் 'இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈஸா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று 'நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்'' (திருக்குர்ஆன் 05:117) என்று சொல்வேன். அப்போது 'இவர்கள் தம் குதிகால்(சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.
புஹாரி : 6526 இப்னு அப்பாஸ் (ரலி).
1819. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள்.அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீஅவர்களுடனேயே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6522 அபூஹூரைரா (ரலி).
Tuesday, December 23, 2008
அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்
புஹாரி : 4850 அபூஹூரைரா (ரலி).
1810. (நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) 'இன்னும் அதிகம் இருக்கிறதா? 'என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!'' என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6661 அனஸ் இப்னு மாலிக் (ரலி).
1811. (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்'' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! 'என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்'' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டு விடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை'' என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன்19:39வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்'' என்றும் கூறினார்கள்.
புஹாரி : 4730 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
1812. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு 'மரணம்' (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் 'சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது'' என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குமேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6548 இப்னு உமர் (ரலி).
1813. (நரகத்தில்) இறை மறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ளதூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6551 அபூஹுரைரா (ரலி).
1814. நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள், பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
1815. (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், '(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது...'' எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, 'அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத் (தைக் கொல்வ)துக்காக முன் வந்தான்'' என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, '(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?' என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.
புஹாரி : 4942 அப்துல்லாஹ் பின் ஸமா (ரலி).
1816. நபி (ஸல்) அவர்கள், 'குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு ஆமிர் இப்னிலுஹை என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதலில் 'சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி) விட்டவர்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3521 அபூ ஹுரைரா(ரலி).
Thursday, December 18, 2008
மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமோர் புதுவருடம் (முன்னுரை)
இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியகலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமிய கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சார செயல்களில் தன்னை ஈடுபடுத்தி மற்றவர்களின் முன் இறைவனின் உயர்ந்த வாழ்க்கை நெறியை கேலிக்குள்ளாக்கிக் கொண்டு வருகின்றது.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்திய கலாச்சாரங்கள் கொள்ளைக் கொண்டு சென்றுக் கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க அழைப்பு விடுத்துக் கொண்டு அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வும் இன்றி அது சாதாரணமாக கடந்து செல்வதற்கு இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தை சரியாக உணராததும், இஸ்லாமிய கலாச்சாரத்தை பேணுவதன் அவசியத்தை சரிவர அறியாததும் முக்கிய காரணங்களாகும்.
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:
இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானா(ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.
1. இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
2. இம்மாதத்தின் 10 ஆம் நாள் இறைத்தூதரான மூஸா(அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து ஏக இறைவன் மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும்(பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.
மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி(ஸல்) அவர்கள் சிலாகித்து குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி(ஸல்) அவர்களால் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது.
"ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது ,(அதற்கு) சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்." அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.
ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
முஸா(அலை) அவர்களை மகிமைப் படுத்துவதற்கு யூதர்களை விட நான் அதிக தகுதி வாய்ந்தவன் எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றாrகள்
இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பை முஸ்லிம் உலகம் அனுஷ்டித்து வருகின்றது.
முஹர்ரம் மாத படிப்பினைகள்:
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஏனோ சிந்திப்பதே இல்லை.
நபி(ஸல்) அவர்கள், அடுத்த வருடம் தான் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன் என்று ஏன் கூறினார்கள்?
அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலை தருகின்றன.
யூதர்களைப் பொறுத்தவரை, உலகில் சமூகத்தை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களில் அதிமானோரையும் கொடூரமாக கொலை செய்தவர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.
இந்த காரணத்தினால் எப்பொழுதுமே தன்னுடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.
அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும் படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
அவற்றில் ஒன்று தான் இந்த ஆஷூரா 9 ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்தில் யூதர்களின் செயலுக்கு தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களை விட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.
இவ்வாறு தனது ஒவ்வொரு அசைவிலும் மாற்றார்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமிய கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது என்று கருதியேயாகும்.
ஆனால் இன்று நடப்பது என்ன?
முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு எனில் அது ஜனவரி 1 தான்.
முஸ்லிம்கள் தினசரி உபயோகிக்கும் நாள்காட்டியும் மாற்றார்களின் கடவுள்களை மகிமைபடுத்தும் அல்லது நினைவுறுத்தும் முகமாக பெயரிடப்பட்ட கிழமைகளைக் கொண்ட நாட்காட்டி தான்.
முஸ்லிம்கள் உடுத்தும் ஆடை முறையும் கரண்டைக்கு கீழே இழுபடும் அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மேற்கத்திய ஆடைமுறை தான்.
முஸ்லிம்கள் இறந்தவர்களை நினைவுறும் முறையும், மாற்றார்கள் தன்னிலை மறந்து தரையில் விழுந்து அழுது புரண்டு தங்களது அங்கங்களையே காயப்படுத்திக் கொள்ளும் "பஞ்சா" போன்ற முறைகள் தான்.
இன்னும் அடுக்கிக் கொள்ள இச்சமுதாயத்தில் அனாச்சார விஷயங்கள் எண்ணற்று மலிந்து நிறைந்துள்ளன.
இவ்விதம் அனாச்சாரங்களின் கூடாரமாக கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு முஹர்ரம் மாத துவக்கம் தரும் மகத்தான மற்றொரு சிந்தனை என்ன?
முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம் என்பதோடு நிற்காமல் சற்று அதன் ஆழத்திற்கு இறங்கிச் சென்றால் புதுவருடம் தரும் மகத்தான சிந்தனையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இறைவன் நாடினால் தொடரும்..
ஆக்கம்: முன்னா
-நன்றி சத்தியமார்க்கம்.காம்
Wednesday, December 17, 2008
சொர்க்கவாசிகளே!!
அல்லாஹ்விடத்தில் தூய்மையானவர்களின் நற்கூலி
(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர் இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும். (அல்குர்ஆன்: 20:76)
சுவன வாசிகளிடம் அல்லாஹ் ஒருபோதும் கோபிப்பதில்லை.
1802. அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி சொர்க்கவாசிகளே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திருப்தி அடைந்தீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகியவற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா? என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன் என்பான். அவர்கள் அதிபதியே! அதை விடச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் உங்கள் மீது என் திருப்தியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்பட மாட்டேன் என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6549 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
Tuesday, December 16, 2008
சுவன மரத்தின் சிறப்பு
1799. சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதை கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால், (படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 56:30 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 4881 அபூஹுரைரா (ரலி).
1800. சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6552 ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி).
1801. சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6553 அபூ ஸயீத் (ரலி).
Sunday, December 14, 2008
ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்
1793. ''இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப் படுவார்)'' என்று கூறினார்கள். மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)'' என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் '(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, '(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறி விடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்'' என்றார்கள்.
புஹாரி : 6463 அபூஹூரைரா (ரலி).
1794. நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6464 ஆயிஷா (ரலி).
1795. சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது 'நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கேட்பார்கள்.
புஹாரி : 1130 அல்முகீரா (ரலி).
1796. 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதை விட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்' என்றார்''.
புஹாரி : 70 அபூ வாயில் (ரலி).
இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்
புஹாரி : 5644 அபூஹுரைரா (ரலி).
1791. இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :5643 கஅப் பின் மாலிக் (ரலி).
1792. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று நபி (ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'பேரீச்சை மரம்' என்றார்கள்'' .
புஹாரி : 61 இப்னு உமர் (ரலி).
Thursday, December 4, 2008
மறுமை நாள்... சொர்க்கம்.. நரகம்..
புஹாரி : 4729 அபூஹுரைரா (ரலி).
1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, 'நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்'' என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.
புஹாரி 4811 இப்னு மஸ்ஊத் (ரலி).
1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6519 அபூஹுரைரா (ரலி).
1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு 'நானே அரசன்!'' என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7412 இப்னு உமர் (ரலி).
Wednesday, December 3, 2008
அரஃபா நோன்பு
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.
அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும் தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி
அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஒரு உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காக சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணார கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னை படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்பு தேடுவதும் பல மணித்துளிகளுக்கு இவ்வுலக சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.
அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்கு செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்கு மாறாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்கள் முழுவதும் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளது தான் இதற்குக் காரணமாகும்.
அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களை விட வேறெந்த நாட்களும் இல்லை. அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதை விடவா? என்று வினவ, ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விட என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லையெனில் அது மிகவும் சிறந்த செயலே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.
நான் நபி(ஸல்) அவர்களை (இந்த)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாக அறவே பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
மற்றவரை விட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களை விட இந்த நாட்களில் அல்லாஹ்வை துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும்.
நோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான் மாத கடமையான நோன்பைத் தவிர தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டி நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்த செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதே நேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வை புகழ்தல், இஸ்திக்ஃபார் அதாவது பாவமன்னிப்பு தேடுதல், ஸதகாத் தர்மங்கள் செய்வது போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும், பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.
நன்றி: தமிழ்இஸ்லாம்.காம் & சத்தியமார்க்கம்.காம்
Tuesday, December 2, 2008
பாவங்களை மீண்டும் செய்து விட்டு தவ்பா செய்பவன் பற்றி....
புஹாரி : 6487 அபூஹுரைரா (ரலி).
1798. ''எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்'' என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், 'மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3244 அபூஹுரைரா (ரலி).
புஹாரி : 7507 அபூஹூரைரா (ரலி).
நயவஞ்சகர்களின் பண்புகள்
புஹாரி :4900 ஜைது பின் அர்கம் (ரலி).
1766. அப்துல்லாஹ் இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி (ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள்.
புஹாரி : 1270 ஜாபிர் (ரலி).
1767. (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்'' என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை'' என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்'' என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.
புஹாரி : 1269 இப்னு உமர் (ரலி).
1768. இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் 'குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்' அல்லது 'ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்' (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், 'நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று கேட்டார். மற்றொருவர், 'நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை' என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், 'நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ், '(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை'' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.
புஹாரி :4817 இப்னு மஸ்ஊது (ரலி).
1769. நபி (ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்து விட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் 'இவர்களைக் கொல்வோம்!'' என்றனர். அப்போது 'நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?' (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. 'நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :1884 ஜைது பின் ஸாபித் (ரலி).
1770. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போருக்குச் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள் அப்போதுதான் 'தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்படவேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 03:188 வது) இறைவசனம் அருளப்பெற்றது.
புஹாரி : 4567 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).
1771. (மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் தம் காவலரிடம் 'ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, 'தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட வேண்டி வருமே!' என்று (நான் வினவியதாகக்) கேள்'' என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) 'உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்'' என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் 'நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டபடவேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:187, 188) .
புஹாரி : 4568 அல்கமா பின் வக்காஸ் (ரலி).
1772. ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். 'அல்பகரா' மற்றும் 'ஆலு இம்ரான்' அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) 'முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்தைத் தவிர வேறெதுவும் தெரியாது'' என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), 'இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்'' என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், 'இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்'' என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டிப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.
புஹாரி : 3617 அனஸ் (ரலி).
அல்லாஹ் அதிக ரோஷக்காரன்
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா (ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களிடம் 'இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதில் கூறினார்கள்.
புஹாரி :4634 அம்ர் பின் அபூவாயில் (ரலி).
1756. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறை நம்பிக்கையாளர் செய்வதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5223 அபூ ஹுரைரா (ரலி).
1757. அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5222 அஸ்மா (ரலி) .