1840. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்'' என்று சொல்ல கேட்டேன்.
புஹாரி : 7093 இப்னு உமர் (ரலி).
1841. தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் 'துல்கலஸா' கடவுள் சிலையைச் சுற்றி அசையாதவரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7116 அபூஹுரைரா (ரலி).
1842. ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராதவரை மறுமை நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7115 அபூஹுரைரா (ரலி).
1843. ''அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 1596 அபூஹுரைரா (ரலி).
1844. கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3517 அபூஹுரைரா (ரலி).
1845. சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2928 அபூஹுரைரா (ரலி).
1846. (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்'' என்று கூறினார்கள். மக்கள், '(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3604 அபூஹூரைரா (ரலி).
1847. (தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்கமாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3027 அபூஹுரைரா (ரலி).
1848. (தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (தற்போதைய ரோமப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அதன் பிறகு சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் இறைவழியில் செலவழிப்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3121 ஜாபிர் இப்னு சமுரா (ரலி).
1849. யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், ஒரு கல்கூட, முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு'' என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3593 இப்னு உமர் (ரலி).
1850. இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான 'தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாதவரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
புஹாரி : 3609 அபூஹுரைரா (ரலி).
Saturday, January 3, 2009
Subscribe to:
Posts (Atom)