அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Wednesday, December 3, 2008

அரஃபா நோன்பு

ரமலான் மாத கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபா தின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும். அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கிய கிரியைகளில் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்கு செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.


அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும் தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி

அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஒரு உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காக சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணார கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னை படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்பு தேடுவதும் பல மணித்துளிகளுக்கு இவ்வுலக சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.

அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்கு செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்கு மாறாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்கள் முழுவதும் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளது தான் இதற்குக் காரணமாகும்.

அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களை விட வேறெந்த நாட்களும் இல்லை. அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதை விடவா? என்று வினவ, ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விட என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லையெனில் அது மிகவும் சிறந்த செயலே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களை (இந்த)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாக அறவே பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

மற்றவரை விட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களை விட இந்த நாட்களில் அல்லாஹ்வை துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

நோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான் மாத கடமையான நோன்பைத் தவிர தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டி நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்த செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதே நேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வை புகழ்தல், இஸ்திக்ஃபார் அதாவது பாவமன்னிப்பு தேடுதல், ஸதகாத் தர்மங்கள் செய்வது போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும், பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.

நன்றி: தமிழ்இஸ்லாம்.காம் & சத்தியமார்க்கம்.காம்