அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Monday, November 17, 2008

தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்

1728. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, இருந்து கொண்டு, 'லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!'' என்று அழைத்தார்கள். 'கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று கூறினார்கள். நான், 'சரி (கட்டாயம் கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினேன். (அந்த வார்த்தை,) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4202 அபூமூஸா அல் அஷ்அரி (ரலி).


1729. என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது 'இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :834 அபூபக்ர் அஸ்ஸித்திக் (ரலி).


1730. அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓத வேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க மாட்டார். எனவே, எனக்கு உன் தரப்பிலிருந்து (பாவ) மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கிறாய்!'' என்று கூறுங்கள் என்றார்கள்.
புஹாரி : 7387 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).


1731. நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்; அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ர், அல்லாஹும்ம மஸீஹுத் தஜ்ஜால், அல்லாஹும்மஃக் ஸில் கல்பீ பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமாநக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மிஷ்ரிக்கி வல் மஃக்ரிப். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்மஃஸமி, வல்மஃக்ரம்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும், பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நான் (மகாபொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியின் நீராலும் ஆலங்கட்டியின் நீராலும் என் உள்ளத்தைக் கழுவிடுவாயாக! அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தை நீ தூய்மைப்படுத்துவாயாக! மேலும், கிழக்கிற்கும் மேற்கிற்கும்இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், பாவத்திலிருந்தும் கடனிலிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
புஹாரி : 6377 ஆயிஷா (ரலி).


1732. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மாமத்'' என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
புஹாரி : 6367 அனஸ் (ரலி).


1733. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.
புஹாரி :6347 அபூஹூரைரா (ரலி).