அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Tuesday, December 2, 2008

பாவங்களை மீண்டும் செய்து விட்டு தவ்பா செய்பவன் பற்றி....

1754. ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்து விட்டேன்'' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்து விட்டேன்'' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடியவரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்'' என்று சொன்னான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவனத்தின் சிறப்புகளும் சுவனவாசிகளும்
1797. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6487 அபூஹுரைரா (ரலி).

1798. ''எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்'' என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், 'மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3244 அபூஹுரைரா (ரலி).
புஹாரி : 7507 அபூஹூரைரா (ரலி).

நயவஞ்சகர்களின் பண்புகள்

1765. ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்'' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்'' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர் (ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை'' என்று அவர்கள் சாதித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை'' என்று கூறினார்கள். அப்போது, 'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது'' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவு படுத்திவிட்டான்)'' என்று கூறினார்கள்.
புஹாரி :4900 ஜைது பின் அர்கம் (ரலி).


1766. அப்துல்லாஹ் இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி (ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள்.
புஹாரி : 1270 ஜாபிர் (ரலி).


1767. (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்'' என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை'' என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்'' என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.
புஹாரி : 1269 இப்னு உமர் (ரலி).


1768. இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் 'குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்' அல்லது 'ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்' (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், 'நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று கேட்டார். மற்றொருவர், 'நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை' என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், 'நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ், '(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை'' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.
புஹாரி :4817 இப்னு மஸ்ஊது (ரலி).


1769. நபி (ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்து விட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் 'இவர்களைக் கொல்வோம்!'' என்றனர். அப்போது 'நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?' (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. 'நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :1884 ஜைது பின் ஸாபித் (ரலி).


1770. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போருக்குச் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள் அப்போதுதான் 'தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்படவேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 03:188 வது) இறைவசனம் அருளப்பெற்றது.
புஹாரி : 4567 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).


1771. (மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் தம் காவலரிடம் 'ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, 'தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட வேண்டி வருமே!' என்று (நான் வினவியதாகக்) கேள்'' என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) 'உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்'' என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் 'நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டபடவேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:187, 188) .
புஹாரி : 4568 அல்கமா பின் வக்காஸ் (ரலி).


1772. ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். 'அல்பகரா' மற்றும் 'ஆலு இம்ரான்' அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) 'முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்தைத் தவிர வேறெதுவும் தெரியாது'' என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), 'இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்'' என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், 'இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்'' என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டிப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.
புஹாரி : 3617 அனஸ் (ரலி).

அல்லாஹ் அதிக ரோஷக்காரன்

1755. ''அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்'' (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா (ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களிடம் 'இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதில் கூறினார்கள்.
புஹாரி :4634 அம்ர் பின் அபூவாயில் (ரலி).


1756. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறை நம்பிக்கையாளர் செய்வதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5223 அபூ ஹுரைரா (ரலி).

1757. அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5222 அஸ்மா (ரலி) .