அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, January 4, 2009

இப்னு ஸய்யாத் பற்றி

1851. உமர் (ரலி) நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபியவர்களோடு (தான் இறைத்தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். பனீமகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனுடைய முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர் (ஸல்) தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து வீட்டு, 'நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்'' என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகிறீர்களா?' என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்'' என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், (உன் நிலைபற்றி) நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், 'என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன'' என்றான். நபி (ஸல்) அவர்கள், 'உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு, 'நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னை சோதிப்பதற்காக) மறைத்து வைத்துள்ளேன். (அது என்ன என்று சொல்)'' என்றார்கள். இப்னு ஸய்யாத், 'அது 'துக்' என்று கூறினான். (அதாவது 'துகான்' என்பதை 'துக்' என அரைகுரையாகச் சொன்னான்.) உடனே நபி (ஸல்) அவர்கள், 'தூர விலகிப் போ! நீ உன் எல்லையை தாண்டிவிட முடியாது என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவனைக் கொல்ல எனக்கு அனுமதியுங்கள். இவனுடைய கழுத்தை நான் சீவி விடுகிறேன்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை'' என்றார்கள்.
புஹாரி : 3055 இப்னு உமர் (ரலி).

1852. நபி (ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்ச தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து அவனுடைய பேச்சு திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்து நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தன்னுடைய படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, 'ஸாஃபியே!'' (இது இப்னு ஸய்யாதின் பெயராகும்.) என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், 'அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவு படுத்தியிருப்பான்'' என்றார்கள்.
புஹாரி : 3056 இப்னு உமர் (ரலி).

1853. நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வைஅவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
புஹாரி : 3057 இப்னுஉமர் (ரலி).

கலிஃபா உமர் (ரலி)

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”

உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்.
****************************************************

"அந்த கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும்" என்ற காந்தீஜீயின் கூற்றை ஏற்க பிடிக்காமல்,ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சே,நம் தேச தந்தையை சுட்டுக்கொன்றான்.
நன்றி :-PEACE TRAIN