அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Saturday, October 4, 2008

இரட்டை ஹிஜ்ரத் வாசிகள்.

1627. நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டு விட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூ ருஹ்கி ஆவார். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் இப்னு அபீ மூஸா (ரஹ்) கூறினார்: ''என்னுடைய (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்'' என்றோ 'ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம் என்றோ (என் தந்தை அபூ மூஸா (ரலி)) கூறினார்கள். நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கி விட்டது. (அபிசினியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்னெவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, 'உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம்'' என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அஸ்மா அவர்களைக் கண்டபோது, 'இவர் யார்?' என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். '(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்'' என்று ஹஃப்ஸா (ரலி), 'இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்'' என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி), 'உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில்... அல்லது பூமியில்... இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவு மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்'' என்று கூறினார்கள். 'அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்'' என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4230-4231 அபூ மூஸா (ரலி).

அன்ஸாரிகளின் சிறப்புகள்.


1628. ''(உஹதுப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்...'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:122-ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், 'அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்'' என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான்.
புஹாரி : 4051 ஜாபிர் (ரலி).


1629. அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக'' என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.
புஹாரி: 4906 மூஸாபின் உக்பா (ரலி).


1630. (அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்'' ஒரு மணவிழாவிலிருந்து வருவதை'' என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நின்று கொண்டு, 'இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
புஹாரி : 3785 அனஸ் (ரலி).


1631. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று இரண்டு முறை கூறினார்கள்.
புஹாரி : 3786 அனஸ் (ரலி).


1632. ''அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்து போய் விடுவார்கள். எனவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3801 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

அன்ஸாரிகளில் சிறந்தோர்.


1633. ''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் எனக் காண்கிறேன்'' என்று கூறினார்கள். அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறினார்கள்'' என்று சொல்லப்பட்டது.
புஹாரி :3789 அபூஉஸைத் (ரலி).

1634. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னை விட வயதில் பெரியவராக இருந்தும் எனக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். ('வேண்டாம்' என நான் மறுத்த போது) 'அன்சாரிகள் ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை பார்த்திருக்கிறேன்; எனவே, அவர்களில் எவரை நான் கண்டாலும் (அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை'' என்று ஜரீர் (ரலி) கூறினார்.
புஹாரி : 2888 அனஸ் (ரலி).

1635. அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! கிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 3514 அபூஹூரைரா (ரலி).

1636. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, 'கிஃபார்' குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! 'அஸ்லம்' குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! 'உஸைய்யா' குலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3513 இப்னு உமர் (ரலி).

1637. குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3504 அபூஹுரைரா (ரலி).

1638. அஸ்லம், கிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலங்களில் சிலரும் - அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும் அல்லாஹ்விடம் அல்லது மறுமை நாளில் அஸத், தமீம், ஹவாஸின் மற்றும் கத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3516 அபூ ஹுரைரா (ரலி)

1639. அக்ராஉ இப்னு ஹாபிஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், 'தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர்களான அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தாம்'' என்று கூறினார்கள். 'மற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்' என்றும் (நபியவர்கள் கூறினார்கள் என) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு அபீ யஅகூப் சந்தேகத்துடன் கூறுகிறார். நபி (ஸல்) அவர்கள், 'பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத், மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய குலங்களை விட அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ இப்னு ஹாபிஸ் (ரலி), 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (அஸ்லம், கிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தினரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத் மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய) அவர்களை விடச் சிறந்தவர்களே'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3516 அபூபக்ரா (ரலி).

1640. துஃபல் இப்னு அம்ர் அத்தவ்ª (ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) 'தவ்ஸ்' குலத்தார் மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, 'தவ்ஸ் குலத்தார் அழியட்டும்'' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 2937 அபூஹூரைரா (ரலி).

1641. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், 'அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் உம்மத்தினரிலேயே அதிகக் கடுமையுடன் தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தருமப் பொருள்கள் வந்தபோது இறைத்தூதர், 'இவை எங்கள் இனத்தாரின் தருமப் பொருள்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூ தமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2543 அபூஹூரைரா (ரலி).

1642. மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3493-3494 அபூஹுரைரா (ரலி)

குறைஷிப் பெண்களின் சிறப்பு.

1643. குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள் .இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பின்பு, 'இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3434 அபூஹூரைரா (ரலி).

1644. ''இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?' என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 2294 ஆஸிம் (ரலி).