அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Thursday, August 13, 2009

நபித் தோழர்களின் சிறப்புகள்:-

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
"இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?' என்று நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், '(ஒரு முறை மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன், நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை பார்த்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து, நபி(ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது, 'என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்" என்று கூறினார்கள்.
புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3678

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, 'யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), 'இவர் பிலால்' என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், 'இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), 'இது உமருடையது' என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)" என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்" என்று கேட்டார்கள்.
புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3679


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான் (ஜீப்ரிலிடம்), 'இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், 'உமர் அவர்களுக்குரியது' என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. எனவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்" என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, 'தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார்கள்.
புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3680

நபித் தோழர்களின் சிறப்புகள்

அனஸ்(ரலி) அறிவித்தார்
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்" என்று கூறினார்கள்.
புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3675

' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கெண்டிருக்கும்போது என்னிடம் அபூ பக்ரும் உமரும் வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் (நான் நீர் இறைத்து முடித்த பின்) வாளியை எடுத்து ஒரு நாளி நீரை... அல்லது இரண்டு வாளிகள் நீரை... இறைத்தார்கள். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு, அபூ பக்ர் அவர்களின் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக் கொள்ள அது அவரின் கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு நீர் இறைத்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவான வஹ்ப் இப்னு ஜரீர்(ரஹ்), 'இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள 'அத்தன்' என்னும் சொல், 'ஒட்டகம் தாகம் தீர நீரருந்தி, மண்டியிட்டுப்படுத்து ஓய்வெடுக்கும் இடம்' எனப் பொருள்படும்' என்று கூறுகிறார்கள்.
புகாரி-4, அத்தியாயம் 62, எண் 3676

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நான் சில மக்களிடையே நின்று கொண்டிருக்க, அவர்கள் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுக்காக பிரார்த்திதார்கள். அப்போது உமர் அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள் - அப்போது என் பின்னாலிருந்து ஒருவர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் - ரலி - அவர்களை நோக்கி,) 'அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல், அடக்கம் செய்யப்படும் போது) உங்களை உங்களுடைய இரண்டு தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்க)ளுடன் (அவர்களின் மண்ணறைகளுக்கே அருகே) அடங்கச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எனவே, உங்களை அல்லாஹ் அவ்விருவருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று கூறினார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களாக இருந்தார்கள்.
புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3677

நபித் தோழர்களின் சிறப்புகள்:-

அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

நான் என் வீட்டில் உளூச் செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்" என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி(ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்" என்று கூறினர். நான் (நபி - ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்" என்று கூறினர். நான் (நபி - ஸல் - அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அரும்லுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விடப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), 'இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்" என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர்கள், '(நானே) அபூ பக்ர் (வந்துள்ளேன்)" என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'சற்றுப் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு (நபி - ஸல் - அவர்களிடம்) சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இதோ அபூ பக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நான் அபூ பக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்" என்று சொன்னேன். உடனே, அபூ பக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (ம்ணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி,விட்டுவிட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), 'அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்" என்று சொல்லிக் கொண்டேன்.
.." இன்னார்' என்று அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) கூறியது. தம் சகோதரைக் கருத்தில் கொண்டே" என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்:
அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். வந்தவர், '(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்)" என்று சென்னார். நான், 'கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, 'இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நான் சென்று, 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்" என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். 'அல்லாஹ் இன்னாருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்" என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர், '(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)" என்று பதிலளித்தார். உடனே, 'கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், 'உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்" என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள்.
அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்:
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), 'நான் (நபி - ஸல் அவர்களும், அபூ பக்ர் - ரலி - அவர்களும், உமர் - ரலி - அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்" என்று கூறினார்கள்
புகாரி பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3674