அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Tuesday, January 27, 2009

(தஃப்ஸீர்) விரிவுரை

1901. ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், 'அஸ்ஸலாமு அலைக்கும்'' (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள். அவரின் ஆட்டு மந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு ஸலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 04:94) (இங்கே 'உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.
புஹாரி : 4591 இப்னு அப்பாஸ் (ரலி).


1902. அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது 'உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று. மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:189) என்ற இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்களின் விஷயத்தில் இறங்கியது.
புஹாரி : 1803 அபூ இஸ்ஹாக் (ரலி).


1903. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) 'இந்த இணைவைப்பாளர்கள் யாரை (க்கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது யார் என்பதற்காக அவனுடைய நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் 'ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தம் (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
புஹாரி :4714 இப்னு மஸ்ஊத் (ரலி).


1904. நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், 'அது (நயவஞ்சகர்களை)அம்பலப்படுத்தக் கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டு விட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்'' என்று கூறினார்கள். நான் அவர்களிடம் , 'அல் அன்ஃபால்' எனும் (8 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பத்ருப்போர் குறித்து அது அருளப்பெற்றது'' என்று பதிலளித்தார்கள். நான் 'அல்ஹஷ்ர்' எனும் (59 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 4882 இப்னு அப்பாஸ் (ரலி).


1905. (என் தந்தை) உமர் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள் மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருள்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்து விட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ, மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவரின் பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?

2. 'கலாலா' என்றால் என்ன?

3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்
புஹாரி : 5588 இப்னு உமர் (ரலி).


1906. குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ் (ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே 'இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.
புஹாரி : 3966 அபூதர் (ரலி).

(தஃப்ஸீர்) விரிவுரை

1897. ''(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!'' என்ற (திருக் குர்ஆன் 04:06) இறை வசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.
புஹாரி : 2212 ஆயிஷா (ரலி).


1898. ''ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறில்லை'' என்னும் (4:128) திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது ஆயிஷா (ரலி), 'ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத வயோதிகம் முதலியவற்றைக் கண்டு அவளைப் பிரிந்துவிட விரும்பும் நிலையில், அவள் 'என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக் கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்து விடு' என்று சொல்வதை இது குறிக்கும்'' என்று கூறிவிட்டு, 'இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால் தவறேதுமில்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2694 ஆயிஷா (ரலி).


1899. இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டு விட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், 'ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றி விடவில்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4590 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).


1900. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், 'ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றியும், 'மேலும், (கொலை செய்யக்கூடாது என) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்'' என்று தொடங்கி 'பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர் தவிர'' என்று முடியும் (திருக்குர்ஆன் 25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நானே அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (எனவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)'' என்று கூறிக் கொண்டனர். எனவே, அல்லாஹ் 'அவர்களில், மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத்தவிர. அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 25:70 வது) வசனத்தை அருளினான்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 4765 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).


(தஃப்ஸீர்) விரிவுரை

1893. பனூ இஸ்ராயீல்களுக்கு, '(ஊருக்குள் நுழையும்போது) அதன்வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் 'ஹித்தத்துன்' ('பாவ மன்னிப்புக் கோருகிறோம்') என்று சொல்லியபடியும் நுழையுங்கள்'' என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்' என்னும் சொல்லை 'ஹின்தத்துன் - கோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய விதை என்று கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3403 அபூஹுரைரா (ரலி).


1894. அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து 'வஹீ' (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப் பெற்றதைவிட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
புஹாரி : 4982 அனஸ் (ரலி).


1895. 'யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர் (ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார் ''இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்'' (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர் (ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்'.'
புஹாரி : 45 உமர் (ரலி).


1896. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்'' (திருக்குர்ஆன் 04:03) என்னும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கிற - அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் - அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும். மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்து கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே அல்லாஹ், 'பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும் நினைவு படுத்துகிறான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவு படுத்துகிறான்)'' என்னும் (திருக் குர்ஆன் 04:127) வசனத்தை அல்லாஹ் அருளினான். மேலும், 'இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும்...'' என்று அல்லாஹ் கூறியிருப்பது, 'அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்.'' என்னும் (திருக்குர்ஆன் 04:03) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில், 'மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ''என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணந்து கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் 'நீதியான முறையிலே தவிர மணந்து கொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
புஹாரி : 2494 உர்வா பின் ஜூபைர் (ரலி).

இஸ்லாமிய ஒழுக்க மாண்பு!ஒருவர் வீட்டினுள் செல்லும்முன் பேணப்படவேண்டிய முறைகள்!!

''நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்" என ரிப்யீ இப்னு ஹிராஷ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)


''நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து. 'ஸலாம்' கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என கில்தா இப்னு ஹன்பல் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாூது மற்றும் திர்மிதீ)


''அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது பார்வையின் காரணத்தால்தான் என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்" என ஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)

''நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்வார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)


''முன் அனுமதி பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அப்படி ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்துவிட்டால் (அவர் அனுமதி பெறாமல்) அவ்வீட்டில் புகுந்தவர் போன்று ஆகிவிடுகிறார்" என தவ்பான் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார் .(நூல்: அபூதாூத், திர்மிதீ) மேற்கண்ட நபிமொழியை இமாம் புகாரி அவர்கள், தம் 'அல்அதபுல் முஃப்ரத்" எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

''ஒருவர் தன் பார்வையை ஒரு வீட்டினுள் முறையற்று செலுத்தும்போது அவ்வீட்டுக்காரர் உற்றுப் பார்த்த அவரின் கண்ணைப் பறித்தால்கூட, அதற்காக அவரை நான் குறை கூறமாட்டேன். அடைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. வீட்டுக்காரர்களே குற்றவாளிகளாவர் என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்""என அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல் : திர்மிதீ)


''வீட்டில் ஓர் ஆண் தொழுது கொண்டிருக்கும்போது அவரின் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் என்று) சொல்வதே அனுமதி அளித்ததாகும். பெண் ஒருத்தி தொழுது கொண்டிருக்கும்போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கப்பட்டால், அப்பெண் தன் புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி அளிப்பதாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூஹ{ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: பைஹகீ)


''நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இரவு மற்றும் பகல் நேரங்களில் வருவேன். நான் இரவில் வரும்போது அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி அளிப்பார்கள். நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்துவிடுவேன். அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய்மொழியில்) அனுமதி அளிப்பார்கள்" என அலி இப்னு அபீ தாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ (நூல்: நஸயீ)


''நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் வந்து அனுமதி கோர, யார் அது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டதற்கு, அபூபக்ர் என்று பதில் சொன்னார்கள். அதன்பிறகு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்க, உமர் என்றார்கள் அதன் பின்பு வந்த உதுமான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களும் தம் பெயர் கூறியே அனுமதி பெற்றார்" என அபூ மூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)

''என் தந்தைக்கு இருந்த கடன் விஷயமாக, நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, (அவர்கள் வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான்தான் என்று குரல் கொடுத்தேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், நான்தான் ''என்றால் யார்" என்று அதிருப்தியோடு கேட்டார்கள்" என ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூது, மற்றும் திர்மிதீ)


''நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்றார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்" என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி)


''இரவில் நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும்படியாகவும் 'ஸலாம்" கூறுவார்கள்" என மிக்தாத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)


''ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு 'ஸலாம்" கூறட்டும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூ மாலிக்கில் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)


(அடுத்தவர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று தடவையே. உனக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால், (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், திரும்பிவிடு என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூமூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாூது மற்றும் திர்மிதீ)

Monday, January 26, 2009

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து

1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், 'இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சொன்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, 'அபூபக்ரே! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து கொள்வோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. எனவே, நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன் மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்'' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே, 'நீ யாருடைய பணியாள்? இளைஞனே!'' என்று கேட்டேன். அவன், 'மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)'' என்று அல்லது மக்காவாசிகளில் ஒருவரின் (பணியாள்) என்று பதிலளித்தான். நான், 'உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?'என்று கேட்டேன். அவன், 'ஆம் (இருக்கிறது)'' என்று சொன்னான். நான், 'நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?' என்று கேட்டேன். அவன், 'சரி (கறக்கிறேன்)'' என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், '(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக் கொள்'' என்று சொன்னேன். -அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்: தம் இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை கண்டேன். அவன், உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகத்தை தணித்துக் கொண்டு, உளூச் செய்து கொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும், ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப் பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், 'பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு, '(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (வந்துவிட்டது)'' என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னுமாலிக் தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் முஸ்லிமாகியிருக்கவில்லை.) நான், '(எதிரிகள்) நம்மிடம் வந்து சேர்ந்து விட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராகாவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே, சுராகாவுடன் அவரின் குதிரை தன் வயிறு வரை பூமியில் புதைந்து விட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் இப்னு முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: 'பூமியின் ஓர் இறுகிய பகுதியில்'' என்று (அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்கள் என) கருதுகிறேன். உடனே சுராகா, 'நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக கருதுகிறேன். எனவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களை விட்டுத் திசைதிருப்பி விடுவேன்'' என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தன்னைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், 'உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை'' என்று கூறலானார். மேலும், (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பியனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்.
புஹாரி :3615 அல்பராவு பின் ஆஸிஃப் (ரலி).

Sunday, January 25, 2009

இஸ்லாம் பார்வையில் "கோபம்"

அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)


அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். ”(அபூதாவூத்)


அறிவிப்பாளர் : அபூதர் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ” (மிஷ்காத்)



அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள். (புகாரி)
thanks to : அமைதி ரயில்

Thursday, January 22, 2009

தொழுகையின் முக்கியத்துவம்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.

அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். “நம் கதி என்னவாகுமோ?”என நினைத்து அண்ணல் நபி அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார். செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.

“பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114) இதைக் கேட்ட அந்த மனிதர் “எனக்கு மட்டும்தானா?” என வினவினார். “இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி அவர்கள். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)

அண்ணல் நபி நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)


அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நபிகள் நாயகம் அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: “எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது. (முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான்)

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நபி அவர்கள் நவின்றார்கள்: “இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணை வைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.” (முஸ்லிம்)

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நபி அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, “நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,

“நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அபு ஹுரைரா (ரலி)

நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)

நான் நபி அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் “வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!” (முஸ்னத் அஹமத்)

Wednesday, January 14, 2009

நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு

1869. இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற் புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புனிதப் போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப் போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால் நான் (இதுவரை) செய்து வந்த வழிபாடு வீணாகி நான் இழப்புக்குள்ளாகி விட்டேன் (போலும் என வருந்தினேன்).
புஹாரி : 6453 ஸஆது பின் அபீவக்காஸ் (ரலி).

1870. ''அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 6460 அபூஹூரைரா (ரலி).

1871. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
புஹாரி : 5416 ஆயிஷா (ரலி).

1872. முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நாளில் இரண்டு முறை உணவு உண்டால் அதில் ஒன்று (வெறும்) பேரீச்சம் பழமாகவே இருக்கும்.
புஹாரி : 6455 ஆயிஷா (ரலி).

1873. என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம் பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம் அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான் என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்? ஏன்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று ) தண்ணீர். தவிர அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்தவதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.
புஹாரி : 2567 உர்வா (ரலி).

1874. இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
புஹாரி : 5374 ஆயிஷா (ரலி).

1875. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.
புஹாரி : 5383 அபூஹூரைரா (ரலி).

Monday, January 12, 2009

பனூ இஸ்ராயீல்கள் மூவரின் வரலாறு

1868. பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான் (என்றோ) அல்லது மாடு தான். (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப்போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும்(ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய் விட்டது) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான என் வாழ்வதாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்'' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீதுகோபமுற்றான்'' என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3464 அபூ ஹுரைரா (ரலி).

Saturday, January 10, 2009

மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் அழகிய விதிமுறைகள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُواْ شَهِيدَيْنِ من رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاء أَن تَضِلَّ إْحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الأُخْرَى وَلاَ يَأْبَ الشُّهَدَاء إِذَا مَا دُعُواْ وَلاَ تَسْأَمُوْاْ أَن تَكْتُبُوْهُ صَغِيرًا أَو كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِندَ اللّهِ وَأَقْومُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلاَّ تَرْتَابُواْ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلاَّ تَكْتُبُوهَا وَأَشْهِدُوْاْ إِذَا تَبَايَعْتُمْ وَلاَ يُضَآرَّ كَاتِبٌ وَلاَ شَهِيدٌ وَإِن تَفْعَلُواْ فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَيُعَلِّمُكُمُ اللّهُ وَاللّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (அல்குர்ஆன்: 2:282)

Monday, January 5, 2009

தஜ்ஜால் பற்றிய விவரங்கள்

1854. நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்' என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, 'அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், 'தஜ்ஜால்' என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3439 இப்னு உமர் (ரலி).

1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7131 அனஸ் (ரலி).

1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), 'தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை 'இது நெருப்பு' என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை 'இது குளிர்ந்த நீர்' என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).

1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).

Sunday, January 4, 2009

இப்னு ஸய்யாத் பற்றி

1851. உமர் (ரலி) நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபியவர்களோடு (தான் இறைத்தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். பனீமகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனுடைய முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர் (ஸல்) தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து வீட்டு, 'நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்'' என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகிறீர்களா?' என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்'' என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், (உன் நிலைபற்றி) நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், 'என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன'' என்றான். நபி (ஸல்) அவர்கள், 'உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு, 'நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னை சோதிப்பதற்காக) மறைத்து வைத்துள்ளேன். (அது என்ன என்று சொல்)'' என்றார்கள். இப்னு ஸய்யாத், 'அது 'துக்' என்று கூறினான். (அதாவது 'துகான்' என்பதை 'துக்' என அரைகுரையாகச் சொன்னான்.) உடனே நபி (ஸல்) அவர்கள், 'தூர விலகிப் போ! நீ உன் எல்லையை தாண்டிவிட முடியாது என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவனைக் கொல்ல எனக்கு அனுமதியுங்கள். இவனுடைய கழுத்தை நான் சீவி விடுகிறேன்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை'' என்றார்கள்.
புஹாரி : 3055 இப்னு உமர் (ரலி).

1852. நபி (ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்ச தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து அவனுடைய பேச்சு திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்து நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தன்னுடைய படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, 'ஸாஃபியே!'' (இது இப்னு ஸய்யாதின் பெயராகும்.) என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், 'அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவு படுத்தியிருப்பான்'' என்றார்கள்.
புஹாரி : 3056 இப்னு உமர் (ரலி).

1853. நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வைஅவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
புஹாரி : 3057 இப்னுஉமர் (ரலி).

கலிஃபா உமர் (ரலி)

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”

உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்.
****************************************************

"அந்த கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும்" என்ற காந்தீஜீயின் கூற்றை ஏற்க பிடிக்காமல்,ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சே,நம் தேச தந்தையை சுட்டுக்கொன்றான்.
நன்றி :-PEACE TRAIN

Saturday, January 3, 2009

குழப்பங்கள் கிழக்கிலிருந்து தோன்றுதல். குழப்பங்களின் நிலைகளில் சில

1840. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்'' என்று சொல்ல கேட்டேன்.
புஹாரி : 7093 இப்னு உமர் (ரலி).


1841. தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் 'துல்கலஸா' கடவுள் சிலையைச் சுற்றி அசையாதவரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7116 அபூஹுரைரா (ரலி).


1842. ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராதவரை மறுமை நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7115 அபூஹுரைரா (ரலி).


1843. ''அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 1596 அபூஹுரைரா (ரலி).


1844. கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3517 அபூஹுரைரா (ரலி).


1845. சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2928 அபூஹுரைரா (ரலி).


1846. (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்'' என்று கூறினார்கள். மக்கள், '(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3604 அபூஹூரைரா (ரலி).


1847. (தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்கமாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3027 அபூஹுரைரா (ரலி).


1848. (தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (தற்போதைய ரோமப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அதன் பிறகு சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் இறைவழியில் செலவழிப்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3121 ஜாபிர் இப்னு சமுரா (ரலி).


1849. யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், ஒரு கல்கூட, முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு'' என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3593 இப்னு உமர் (ரலி).


1850. இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான 'தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாதவரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
புஹாரி : 3609 அபூஹுரைரா (ரலி).