அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Saturday, September 20, 2008

புனித ரமளானின் இறுதிப் பத்தில் ஓர் இனிய பிரார்த்தணை



இந்தப் புனித ரமளானில் தினமும் இறைஞ்சுவதற்குப் பொருத்தமான இந்தப் பிரார்த்தணை, சங்கைக்குரிய கமாலுத்தீன் மதனி அவர்கள் தொகுத்த ஹஜ் உம்ரா சியாரத் வழிகாட்டி என்னும் சிற்றேட்டிலிருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டது. மொழி நடையில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரார்த்தணை
யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! எனது உடலிலும், கேள்வியிலும் பார்வையிலும் ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக. வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. இறை நிராகரிப்பு, ஏழ்மை, மண்ணறை வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை.


யா அல்லாஹ்! நீயே என்னைப் படைத்து பரிபாலிப்பவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. என்னால் இயன்றவரை உனக்களித்த வாக்குறுதியையும், உன்னுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தையும் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கிறேன். நான் செய்த தீங்கிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன்.எனக்கு சகல சௌபாக்கியங்களையும் அருளினாய் என நான் ஒப்புக் கொள்கிறேன். என் பாவத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவே எனது பாவத்தை மன்னித்தருள்வாயாக. பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், முதலியவற்றிலிருந்தும், கடன் அதிகரிப்பதை விட்டும், மனிதர்கள் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! இன்றைய தினத்தின் ஆரம்பத்தை நலவானதாகவும், பகுதியை வெற்றியானதாகவும், இறுதியை ஜெயமானதாகவும் ஆக்கியருள்வாயாக. ஈருலகிலும் நல்லவற்றைத் தருவாயாக. மரணத்திற்குப்பின் நல்வாழ்வையும். சங்கைக் குரிய உன் திருமுகத்தைக் கண்டு மகிழும் பாக்கியத்தையும், எவ்வித தங்கடங்கள் குழப்பங்களின்றி உன்னைச் சந்திக்கும் பெரும் பேற்றையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன்.


யா அல்லாஹ்! நான் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்தும், பிறரால் அநீதி இழைக்கப் படுவதிலிருந்தும், பிறரை நான் தாக்குவதிலிருந்தும், பிறர் என்னைத் தாக்குவதிலிருந்தும், தவறைச் சம்பாதிப்பதிலிருந்தும், மன்னிக்கப்படாத பாவத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! சோதனையான முதுமையை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன். நற்குணங்களின் பக்கம் எனக்கு வழிகாட்டுவாயாயக. அவற்றில் நல்லவற்றைக் காண்பிப்பவன் உன்னைத் தவிர யாருமில்லை. தவறான செயல்கள், தவறான குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. தவறுகளை விட்டும் காப்பாற்றக் கூடியவன் உன்னைத் தவிர யாருமில்லை.
யா அல்லாஹ்! எனது மார்க்கத்தைச் சீர்ப்படுத்துவாயாக. எனது இருப்பிடத்தை விசாலப் படுத்துவாயாயக. எனது ரிஜ்கில் பரக்கத்தை ஏற்படுத்துவாயாக. முரட்டுத்தனம், பொடுபோக்கு, இழிவு முதலிய கெட்ட குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக.


யா அல்லாஹ்! செவிடு, ஊமை, குஷ்டம், கொடு நோய், முதலியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். எனக்கு இறையச்சத்தைத் தந்து என்னைத் தூய்மைப் படுத்துவாயாக. தூய்மைப்படுத்துபவர்களில் நீயே சிறந்தவன். நீயே எனது அதிபதி.


யா அல்லாஹ்! பயனற்ற கல்வி, பயமற்ற உள்ளம், நிறவைடையா மனம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, ஆகியவற்றிலிருந்தும், நான் செய்த தீங்கு, செய்யாத தீங்கு, நான் அறிற்து செய்த பிழைகள், அறியாமல் செய்த பிழைகள், அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்!நீ எனக்கருளிய அருட்கொடைகளும், ஆரோக்கியமும், என்னை விட்டுப் போய்விடுவதை விட்டும், திடீரென வரும் உன் வேதனைகளை விட்டும், உன்னுடைய எல்லாக் கோபங்களை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! கட்டடங்கள் இடிந்து விழுதல், தவறிவிழுதல், தண்ணீரில் மூழ்குதல், நெருப்பில் கரியுதல், இயலாத முதுமை, ஆகியவற்றிலிருந்தும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை வழி கெடுப்பதை விட்டும், கொடிய விஷப் பிராணிகள் கொட்டி மரணமடைவதிலிருந்தும், இழுக்களவில் கொண்டு சேர்க்கும்படியான பேராசையை விட்டும், கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள், கெட்ட நோய்கள், கெட்ட எண்ணங்கள், ஆகியவற்றவை விட்டும், கடன் அதிகரிப்பதை விட்டும், எதிரிகளின் ஆதிக்கத்தை விட்டும், எங்களுக்கு ஏற்படும் தங்கடங்கள் மீது எதிரிகள் மகிழ்ச்சியடைவதை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! எனது செயல்களில் பாதுகாப்பாக எனது மார்க்கத்தையும், பிழைப்பிருக்கும்படியாக எனது இம்மை வாழ்வையும், நான் திரும்பச் செல்லவிருக்கும் எனது மறுமை வாழ்வையும், சீர்படுத்துவாயாக! நன்மையான செயல்களை அதிகம் செய்யும்படியாக எனது வாழ்க்கையையும், அனைத்துத் தீமைகளை விட்டும் நிவர்த்தியானதாக எனது மரணத்தையும், ஆக்கியருள்வாயாக. என்னைப் படைத்தவனே எனக்கு ஆதரவாக உதவியளி, எதிராக உதவாதே. எனக்கு சாதகமாக ஆதரவளி, பாதகமாக ஆதரவளிக்காதே. எனக்கு நேர்வழி காட்டி அவ்வழியை எளிதாக்கியருள்வாயாக.


யா அல்லாஹ்! உன்னை அதிகம் நினைக்கக் கூடியவனாகவும், அதிகம் வழிப்படக் கூடியவனாகவும், அதிகம் அஞ்சக் கூடியவனாகவும், உன் பக்கமே அதிகம் மீள்பனாகவும் என்னை ஆக்கியருள்வாயாக.


யா அல்லாஹ்! பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக. என் பாவத்தைத் தூய்மைப் படுத்துவாயாக. எனது பிரார்த்தணைக்கு பதிலளிப்பாயாக. என்னுடைய ஆதாரத்தை உறுதிபெறச் செய்வாயாக. எனது உள்ளத்தை நேர்வழிப்படுத்துவாயாக. எனது நாவை உறுதியாக்குவாயாக. பொறாமை நெஞ்சில் குடி கொள்வதை விட்டும் என்னை அப்பாற்படுத்துவாயாக.


யா அல்லாஹ்! என்னுடைய செயல்களில் நான் நிலைபட்டிருப்பதையும், நேர் வழியில் நான் உறுதியுடன் இருப்பதையும், உன்னிடம் கேட்கிறேன். நீ எனக்கு அருளிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி உன்னை நன்முறையில் வணங்கக் கூடியவனாக என்னை ஆக்கிவைப்பாயாக.


யா அல்லாஹ்! குறையற்ற உள்ளத்தையும், உண்மை பேசும் நாவையும், தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ நன்மை என அறிந்த அனைத்தையும் தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ தீமை என அறிந்த அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன். நீ அறிந்த அனைத்திலும் பிழை பொறுக்கத் தேடுகிறேன். மறைவானவற்றை நீயே நன்கறிந்தவன்.


யா அல்லாஹ்! நேர் வழியில் செல்ல எனக்கு மன உதிப்பைத் தருவாயாக. எனது ஆன்மாவின் தீங்கை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. நல்லவற்றை செய்வதையும், தீயவற்றை விடுவதையும், ஏழைகளை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன். பாவ மன்னிப்பை உன்னிடம் கேட்கிறேன். உனது அடியார்களைச் சோதிக்க நீ நாடினால் அச்சோதனையில் நான் சிக்காமல் என்னை மரணிக்கச் செய்வாயாக.


யா அல்லாஹ்! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போர் நேசத்தையும், உனது நேசத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் அனைத்து செயல்களையும் நேசிப்பதையும், உன்னிடம் கேட்கிறேன்.


யா அல்லாஹ்! நல்ல கேள்வியையும், நல்ல துஆவையும், நல்ல வெற்றியையும், நற்கூலியையும் எனக்குத் தந்தருள்வாயாக. என்னை நிலையானவனாக ஆக்கி, எனது நன்மையின் எடையை அதிகரிப்பாயாக. எனது ஈமானை முழுமைப்படுத்துவாயாக. சுவனத்தில் எனது தரத்தை உயர்த்துவாயாக. எனது தொழுகைகளை ஏற்றுக் கொள்வாயாக. எனது தவறுகளை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்ந்த பதவியைத் தருவாயாக.


யா அல்லாஹ்! நற்செயல்களின் திறவுகோலையும், அதன் நல்ல துவக்கத்தையும், நல்ல முடிவையும், அக புற நன்மைகள் அனைத்தையும் உன்னிடம் கேட்கிறேன். சுவனத்தில் உயர்ந்த பொறுப்புகளைத் தருவாயாக.


யா அல்லாஹ்! எனது சிறப்பை உயர்த்துவாயாக. பாவத்தை விட்டுவிடுவாயாக. என் உள்ளத்தை; தூய்மைப் படுத்துவாயாக. எனது வெட்கத்தலங்களைப் பாதுகாப்பாயாக. எனது பாவங்களை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்பதவியைத் தருவாயாக. என்னுடைய கேள்வி, பார்வை, ஆத்மா, தோற்றம், குணம், அனைத்திலும் பரக்கத் செய்லாயாக.


யா அல்லாஹ்! எனது குடும்பம், எனது வாழ்க்கை, எனது அறிவு ஆகிய அனைத்திலும் பரக்கத் செய்வாயாக. எனது நற்செயல்களை அங்கீகரித்து சுவனத்தில் உயர் பதவியைத் தருவாயாக.உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலக்கச் செய்வாயாக. உள்ளங்களையும் பார்வைகளையும் திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உன்னை வழிபடுவதன் பக்கம் திருப்புவாயாக. நன்மையைக் குறைக்காமல் அதிகம் தருவாயாக. இழிவு படுத்தாமல் எங்களை சங்கைப் படுத்துவாயாக. இல்லை எனச் சொல்லாமல் தருவாயாக. குறைவின்றிக் கொடுப்பாயாக.


யா அல்லாஹ்! எங்கள் அனைத்துக் காரியங்களின் முடிவையும் நல்முடிவாக்குவாயாக. இம்மையின் இழிவை விட்டும், மறுமையின் வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்களுக்கும் எங்கள் பாவங்களுக்கும் இடையில் சுற்றி வரும் உள்ளச்சத்தை எங்களுக்குத் தருவாயாக. உனது சுவனத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் உன் வழிபாட்டை எங்களுக்குத் தருவாயாக.


யா அல்லாஹ்! எங்கள் கேள்விகளிலும் எங்கள் பார்வைகளிலும், எங்கள் சக்திகளிலும் சுகத்தைத் தருவாயாக. எங்களுக்கு அநீதி இழைத்தவர்களிடம் நீ பழிக்குப் பழி வாங்குவாயாக. எங்கள் பகைவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக. உலகத்தை எங்கள் முக்கிய நோக்கமாகவும், அதற்காகவே வாழக்கூடியவர்களாகவும் எங்களை ஆக்கிவிடாதே. எங்கள் சோதனைகளை எங்கள் மார்க்கத்தில் ஆக்கிவிடாதே. நாங்கள் செய்த பாவங்களின் காரணமாக உன்னை அஞ்சாதவனையும், கருணையில்லாதவனையும் எங்கள் மீது சாட்டிவிடாதே.

யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அனைத்தையும், உனது மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளத் தேவையான மன உறுதியையும் உன்னிடம் கேட்கிறேன். அனைத்து நன்மைகளையும் கனீமத்தாகத் தந்து அனைத்து தீமைகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. சுவனம் கிடைத்து வெற்றி பெற்றவனாகவும், நரகத்தை விட்டு விடுதலை பெற்றவனாகவும் என்னை ஆக்குவாயாக.

கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாகிய இறைவனே! எங்கள் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. எங்கள் எந்தக் குறையையும் மறைக்காமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கவலையையும் சந்தோஷப்படுத்தாமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கடனையும் நிறைவேற்றாமல் வைத்து விடாதே. எங்களுக்குப் பயனுள்ள ஈருலக எந்தத் தேவைகளையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே.

யா அல்லாஹ்! என் இதயத்திற்கு நேர் வழி காட்டும்படியான அருளை, சிதறுண்டுக் கிடக்கும் என் செயல்களை ஒன்று சேர்க்கும்படியான அருளை, என்னிடமிருந்து மறைந்து போனவற்றை பாதுகாக்கும்படியான அருளை, என் முன்னுள்ளவற்றை உன்னளவில் உயர்த்திக் கொள்ளும்படியான அருளை, என் முகத்தை வெண்மையாக்கும்படியான அருளை, எனது அறிவைத் தூய்மைப்படுத்தும் படியான அருளை, எனக்கு நேர்வழி காட்டி என்னை விட்டும் பித்னாக்ளை அப்புறப்படுத்தும்படியான அருளை, அனைத்துத் தீய செயல்களை விட்டும் என்னைப் பாதுகாக்கும்படியான அருளை உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! நியாயத் தீர்பட்பு நாளில் வெற்றியையும், நல்லோர்கள் வாழ்வையும், உயிர்த்தியாகிகள் இருப்பிடத்தையும், நபிமார்களின் தோழமையையும், எதிரிகளுக்குக் கேடாக எனக்கு வெற்றியையும் உன்னிடம் கேட்கிறேன். சரியான ஈமானையும், நற்குணத்தில் நம்பிக்கைகையயும் வெற்றிமேல் வெற்றியையும் எனக்குத் தந்தருள்வாயாக.


யா அல்லாஹ்! உனது அருட் கொடையையும், ஆபியத்தையும், பாவமன்னிப்பையும், விருப்பத்தையும், ஆரோக்கியத்தையும், பத்தினித்தனத்தையும், நற்குணத்தையும், உனது தீர்ப்பைப் பொருந்திக் கொள்ளும் உள்ளத்தையும். உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! என் நப்ஸின் தீங்கிலிருந்தும், உனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அனைத்து உயிர்ப்பிராணிகளின் தீங்கிலிருந்தும், உன்னிடம் காவல் தேடுகிறேன். (எனது நாயனாகிய நீயே) நேர் வழியில் நடத்துபவன்.


யா அல்லாஹ்! எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். நான் இருக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். என் இரகசியத்தையும், பரகசியத்தையும் நீயே அறிந்தவன். உனக்குத் தெரியாமல் என் செயல்களில் எதுவும் இல்லை. நானோ பரம ஏழையாகவும் தேவையுடையவனாகவும் தஞ்சம் நாடி அபயம் கோரக் கூடியவனாக உள்ளேன். உன்னை அஞ்சி பயந்து நான் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டு மிஸ்கீன்கள் கேட்பது போல் கேட்கிறேன். பார்வை இழந்தவன் பயந்து உன்னை அழைத்துக் கேட்பது போல் கேட்கிறேன். கேவலமான பாவி இறைஞ்சுவது போல் இறைஞ்சிக் கேட்கிறேன். தலைதாழ்த்தி தன்னையே உனக்கு அர்ப்பணித்தவனாக உன்னிடம் இறைஞ்சுகிறேன். எனது பிரார்த்தணைகளை அங்கீகரிப்பாயாக.
ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டவதாக.

நன்றி...http://masdooka.wordpress.com

தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்

1563. நபி (ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை. இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) தல்ஹா (ரலி) மற்றும் ஸஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.
புஹாரி : 3723 அபூஉஸ்மான் (ரலி).


1564. அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி), 'நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)'' என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்க, ஸுபைர் (ரலி), 'நான்'' என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்'' என்று கூறினார்கள்.
புஹாரி: 2846 ஜாபிர் (ரலி)


1565. அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் (நபி - ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு... அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, 'என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்'' என்று சொன்னேன். அவர்கள், 'என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!'' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (பார்த்தேன்)'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, 'என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3720 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி).

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. 'என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை'' என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
புஹாரி : 3035-3036 ஜரீர்(ரலி).



1609. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்து விட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 3020 ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஜைனப் (ரலி) ,ஜைது பின் ஹாரிதா (ரலி) உஸாமா பின் ஜைது (ரலி) சிறப்புகள்.

ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு

1595. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?' எனக் கேட்டதற்கு, 'உங்களுள் கை நீளமானவரே!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஜைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஜைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால் தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.
புஹாரி :1420 ஆயிஷா (ரலி).


ஜைது பின் ஹாரிதா (ரலி) உஸாமா பின் ஜைது (ரலி) சிறப்புகள்.

1570. ''வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
புஹாரி : 4782 இப்னு உமர் (ரலி).


1571. நபி (ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், '(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்... (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3730 இப்னு உமர் (ரலி).

அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1556. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4416 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).


1557. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்'' என்று கூறக் கேட்டேன். உடனே, நபித் தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர் பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அலீ எங்கே?' என்று கேட்டார்கள். 'அவருக்குக் கண்வலி'' என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. உடனே, அலீ (ரலி), 'நம்மைப்போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்றார்கள்.
புஹாரி : 2942 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).


1558. அலீ (ரலி) கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. 'நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ, 'அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்'' என்றோ அல்லது, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ சொல்லிவிட்டு, 'அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்'' என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், 'இதோ, அலீ அவர்கள்!'' என்று கூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.
புஹாரி : 2975 ஸலமா பின் அக்வஹ் (ரலி).


1559. நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலி (ரலி)யை காணவில்லை. உன் பெரிய தந்தையின் மகன் எங்கே? என்று ஃபாத்திமா (ரலி)விடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது: கோபித்துக் கொண்டு சென்று விட்டார். என்னிடம் தங்கவில்லை என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர் எங்கே என்று பார்த்து வாரும்! என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது அலி (ரலி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டு மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்! எனக் கூறினார்கள்.
புஹாரி : 441 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) மற்றும் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களின் சிறப்பு ...


1606. உஹதுப் போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன். எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்தனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாவை தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (ஜனாஸா) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'யார் அந்தப் பெண்?' என வினவினார்கள். அம்ர்டைய மகள் என்றோ அல்லது அம்ர்டைய சகோதரி என்றோ (கூடியிருந்தோர்) கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'நீ ஏன் அழுகிறாய்? நீ அழுதாலும் அழாவிட்டாலும் ஜனாஸா உயர்த்தப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்'' என்றார்கள்.
புஹாரி : 1293 ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி).



அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு



1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.
புஹாரி : 3763 அபூமூஸா (ரலி).



1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.
புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி).



1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5002 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்).



1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3758 மஸ்ரூக் (ரலி).

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) அவர்களின் சிறப்பு

1572. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள். உங்களை விட்டு விட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3082 இப்னு அபீ முலைக்கா (ரலி).


அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்


1566. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3744 அனஸ் (ரலி).


1567. நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், 'நம்பத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்'' என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த 'அமீன்' என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
புஹாரி : 3745 ஹூதைஃபா (ரலி

அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்களின் சிறப்பு

1607. அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரிடம், 'இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, 'வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!'' என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு, அபூதர்ரிடம் திரும்பிச் சென்று, 'அவர் நற்குணங்களைக் கைக் கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை பார்த்தேன். ஒரு வாக்கையும், (செவியுற்றேன்) அது கவிதையாக இல்லை'' என்று கூறினார். அபூதர், 'நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை'' என்று கூறிவிட்டு, பயண உணவு எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தன்னுடைய தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூதர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றனர். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ - ரலி - அவர்கள் அபூதர்ரிடம், 'வீட்டுக்கு வாருங்கள்'' என்று சொல்ல) அபூதர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும்வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவரைக் கடந்து சென்றார்கள். 'தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா?' என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியம் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ (ரலி) அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), 'நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?' என்று கேட்டார்கள். அவர், '(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்'' என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி), 'அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் இறைத்தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகிற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள்'' என்று கூறினார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலி அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி), நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீங்கள் உங்கள் (கிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள். அபூதர், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இச்செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்'' என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) என்றும் உறுதி சொல்கிறேன்'' என்று கூறினார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) வந்து, அவரின் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். 'உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும்வழி (கிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?' என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவரின் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போன்றே) அப்பாஸ் (ரலி) அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்தார்கள்.
புஹாரி : 3861இப்னு அப்பாஸ்(ரலி).

உம்மு ஸலமா (ரலி) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு..

1594. நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா (ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா (என்ற நபித்தோழர்)'' என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்'' என்று உம்மு ஸலமா - ரலி - அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா (ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்று எனக்குத் தெரிய வந்தது)'' என்று கூறினார்கள்.நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்களிடம், 'யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3633 அபூஉஸ்மான் (ரலி).


உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு..



1596. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, 'நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்'' என்றார்கள்.
புஹாரி : 2844 அனஸ் (ரலி).

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்

1573. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 3432 அலீ (ரலி).



1574. ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3411 அபூ மூஸா (ரலி).



1575. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி).



1576. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி கூறினார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3819 இஸ்மாயீல் (ரலி).



1577. கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.
புஹாரி : 3818 ஆயிஷா (ரலி).



1578. ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன்.
புஹாரி: 3821 ஆயிஷா (ரலி).

ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்


1560. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, 'என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், 'யாரது?' என்று கேட்டார்கள். வந்தவர், 'நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.
புஹாரி : 2885 ஆயிஷா (ரலி).


1561. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறியதை கேட்டேன்.
புஹாரி : 2905 அலீ (ரலி).


1562. ''(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனச்) கூறினார்கள்'' என்று ஸஅத் (ரலி) சொல்ல கேட்டேன்.
புஹாரி : 3725 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்

1568. நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் விட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். 'இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?' என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹஸன் (ரலி)) ஓடிவந்தார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். 'இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2122 அபூஹூரைரா (ரலி).


1569. அலீ (ரலி) அவர்களின் மகன் ஹஸன் (ரலி), நபி (ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!'' என்று பிரார்த்திக்கக் கண்டேன்.
புஹாரி : 3749 அல்பராஉ (ரலி).