அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Tuesday, November 25, 2008

தவ்பாவின் சிறப்பு

தவ்பா (பாவ மீட்சி)

1746. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி

என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).


1747. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6308 இப்னு மஸ்ஊத் (ரலி).


1748. உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6309 அனஸ் (ரலி).

ஃதிக்ரின் சிறப்பு

அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது ( அல்குர்ஆன் : 29:45 )

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். ( அல்குர்ஆன் : 2:152 )

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! ( அல்குர்ஆன் : 7:205 )

அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!
( அல்குர்ஆன் : 62:10 )

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! ( அல்குர்ஆன் : 33:41,42 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''இரண்டு வார்த்தைகள் உண்டு. அவை நாவிற்கு (கூற) எளிதானது, தராசில் (நன்மையால்) கனமானது, இறைவனுக்கு விருப்பமானதும் ஆகும். (அவை) 1) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி 2) சுப்ஹானல்லாஹில் அளீம்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

பொருள்:
1) அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்
2) கண்ணியமிக்க அல்லாஹ்வை துதிக்கிறேன் ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1408 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்'' என்று நான் கூறுவது, சூரியன் உதிக்கும் (பூமியில் கிடைக்கும்) பொருட்கள் (எனக்கு கிடைப்பதை) விட எனக்கு மிக விருப்பமானதாகும் என்று நபி(ஸல்)கூறினார்கள். (முஸ்லிம்)


(பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாஹ்வே மிகப் பெரியவன்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1409 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

ஒருவர், ''லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீகலஹுலஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்;'' என்று ஒரு நாளைக்கு நூறு தடைவ கூறினால், பத்து அடிமைகளை உரிமை விட்ட நன்மை அவருக்கு உண்டு. அவருக்கு 100 நன்மைகள் எழுதப்படும். அவரை விட்டும் 100 தீமைகள் அழிக்கப்படும். அந் நாளில் மாலை வரை ஷைத்தானை விட்டும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அவரை விட அதிகமாக நற்செயல் செய்தவரைத் தவிர, வேறு எவரும் இவர் கொண்டு வந்ததைவிட மிகச்சிறந்த ஒன்றை கொண்டு வந்தவராக மாட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

மேலும், ''சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி'' என்று ஒரு நாளில் நூறு தடவைக் கூறினால், அவரின் குற்றங்கள் கடல் நுரை அளவுக்கு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1410 )

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஸலவாத் சொல்லுங்கள்

ஃபழாலா இப்னு உபைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ''உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும்! பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்'' என்று கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1404 )

அபூ முஹம்மத் என்ற கஹ்ப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு ஸலாம் எப்படிக் கூறுவது?'' என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது? என்று கேட்டோம் ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்! அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்'' என்று கூறுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஸலவாத்தின் பொருள்:
இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக! நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய்.
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1405 )

அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் : 33:56)

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''(நபியாகிய) என்மீது ஒருவர் ஒரு தடவை ''ஸலவாத்'' கூறினால், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ''ஸலவாத்'' கூறுகின்றான் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1397 )

அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நாட்களில் மிகச்சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். எனவே அன்று என்மீது ஸலவாத் அதிகம் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், என்னிடம் எடுத்துக் காண்பிக்கப்படுகிறது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! நீங்கள் மண்ணோடு மண்ணான நிலையில் எங்களின் ஸலவாத் எப்படி எடுத்துக் காண்பிக்கப்படும்'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''நிச்சயமாக நபிமார்களின் உடல்களை (சாப்பிட) பூமிக்கு அல்லாஹ் தடை செய்து விட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1399 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''என் புதைகுழியை (கப்ரை) விழா கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், நீங்கள் எங்கு இருந்தாலும் என்னை வந்து சேரும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1401 )

அல்லாஹ்வை புகழ்தல், அவனுக்கு நன்றி செலுத்துதல்

அல்லாஹ் கூறுகிறான் :


'என்னை நினையுங்கள் நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!'' (அல்குர்ஆன் : 2:152)


''நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது.'' (அல்குர்ஆன் : 14:7)


''சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!(அல்குர்ஆன் : 17:111)


''அல்லாஹ்வே! நீ தூயவன்'' என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ''அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். (அல்குர்ஆன் : 10:10)


அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:''ஓர் அடியான் உணவைச் சாப்பிட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான். மேலும் தண்ணீர் குடித்து விட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான். இந்த அடியானைக் கண்டு அல்லாஹ் திருப்தியுறுகின்றான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1396 )