அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Monday, February 2, 2009

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்!!!

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், "இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!'' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

"எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: "எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.'' பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், "நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: "நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் அவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.'' (ஸஹீஹுல்புகாரி)

நன்றி PEACE TRAIN

பகமை கொள்வது கூடாது

ஒருவருக்கொருவர் பகமை கொள்வது, உறவை முறிப்பது, புறக்கணிப்பது கூடாது! அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்லகுர்ஆன் : 49:10)


அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நீங்கள் ஒருவருக்கொருவர் பகமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிப்பு செய்து கொள்ளாதீர்கள். உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக – சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருப்பது கூடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1567 )


அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''திங்கள்கிழமையும், வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும். அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். ஆனால் ஒருவருக்கும், அவரின் சகோதரருக்கும் பகைமை இருக்கும் மனிதனைத் தவிர, ''இவ்விருவரும் (இணக்கமாக) ஆகும் வரை பொறுத்திருங்கள். இந்த இருவரும் ஒற்றுமை ஆகும் வரை பொறுத்திருங்கள் என்று கூறப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1568 )


பொறாமை கொள்வது கூடாது! (மார்க்கம் மற்றும் உலகத்தின் நன்மை எதுவாயினும், அது உள்ளவனிடமிருந்து அவை நீங்கிட விரும்புவதே பொறாமையாகும்).


அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? (அல்குர்ஆன் : 4:54)


அபூஹூரைரா (ரலி) அறவிக்கின்றார்கள்:

'' பொறாமை கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். நெருப்பை விறகு சாப்பிடுவது போல் (அல்லது காய்ந்த வைக்கோலைத் தின்பது போல்) நன்மைகளை பொறாமை சாப்பிட்டு விடும்''என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1569 )


''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)