அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்... இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4416 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).
1557. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்'' என்று கூறக் கேட்டேன். உடனே, நபித் தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர் பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அலீ எங்கே?' என்று கேட்டார்கள். 'அவருக்குக் கண்வலி'' என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. உடனே, அலீ (ரலி), 'நம்மைப்போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்றார்கள்.
புஹாரி : 2942 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).
1558. அலீ (ரலி) கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. 'நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ, 'அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்'' என்றோ அல்லது, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ சொல்லிவிட்டு, 'அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்'' என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், 'இதோ, அலீ அவர்கள்!'' என்று கூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.
புஹாரி : 2975 ஸலமா பின் அக்வஹ் (ரலி).
1559. நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலி (ரலி)யை காணவில்லை. உன் பெரிய தந்தையின் மகன் எங்கே? என்று ஃபாத்திமா (ரலி)விடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது: கோபித்துக் கொண்டு சென்று விட்டார். என்னிடம் தங்கவில்லை என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர் எங்கே என்று பார்த்து வாரும்! என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது அலி (ரலி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டு மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்! எனக் கூறினார்கள்.
புஹாரி : 441 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).
Monday, September 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment