''நபியே! மார்க்கத்தை அல்லது மறுமையின் தீர்ப்பைப் பொய்யாக்குவோனை நீர் பார்த்தீரா? அத்தகையோன் தான் அனாதையைக் கடிந்து விரட்டுபவன். அவன் ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும் படி தூண்டவும் மாட்டான். எனவே, இத்தகைய தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் தங்களது தொழுகையில் பராமுகமாக. பொடுபோக்காக இருக்கின்றனர். பிறருக்குக் காண்பிப்பதற்காக, முகஸ்தூதிக்காகத் தொழுகின்றனர்.
மேலும், அவர்கள் அற்பப் பொருட்களையும் கொடுக்காது தடுத்துக் கொள்கின்றனர்'' இந்த அல்குர்ஆன் அத்தியாயம் ஸூரத்துல் மாஊன், ஸூரத்துல் எனும் இரு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இந்த ஸூரா, யார் தொடர்பாக இறங்கியது எனும் விடயத்தில் வித்தியாசமான அறிவிப்புக்கள் காணப்படுகின்றன. லோபித்தனமும் முகஸ்துதியும் கொண்ட ஒரு முனாபிக் - நயவஞ்சகன் தொடர்பாகவே இவ்வத்தியாயம் இறங்கியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். எவர் விடயத்தில் இறங்கியிருந்தாலும் இது கூறுகின்ற தன்மைகள் கொண்ட அனைவரும் அதில் அடங்குவர் என்பதை மனதிற் கொள்ளல் வேண்டும்.இனி ஸூராவுக்கான விளக்கத்திற்கு வருவோம்:''நபியே! மார்க்கத்தைப் பொய்ப்பிப்போனை நீர் பார்த்தீரா?'' இங்கு அல்லாஹ்தஆலா மார்க்கத்தை ஏற்று உண்மைப்படுத்துவது தொடர்பாகவும் அதனை நிராகரித்து பொய்ப்பிப்பது தொடர்பாகவும் ஒரு புதிய கருத்தை - இதுவரை மனிதர்கள் தெரிந்து வைத்திருக்காத ஒரு விளக்கத்தை கூற விரும்புகின்றான். அதனால்தான் ஒரு கேள்விக் குறியுடன் கேட்போரின் கவனத்தைத் திருப்பும் விதத்தில் இந்த ஸூரா துவங்குகிறது.
ஒருவர் கலிமாவை மொழிந்து, தொழுபவராகவும், ஸகாத் கொடுப்பவராகவும் றமழானில் நோன்பு நோற்பவராகவும் வசதியிருப்பின் ஹஜ் கடமையை நிறைவேற்றியவராகவும் இருப்பாராயின் அவரே மார்க்கத்தை ஏற்று, உண்மைப்படுத்தியவர். இவற்றில் ஒன்றை மறுத்து நிராகரிப்பவரே மார்க்கத்தை பொய்ப்பிப்பவர் என்பது தான் இதுபற்றி மனிதர்கள் கொண்டுள்ள கருத்தாகும். ஆனால், இங்கு அல்லாஹ்தஆலா மார்க்கத்தை உண்மைப்படுத்துதல், பொய்ப்பித்தல் தொடர்பாக இதுவரை மனிதர்கள் அறிந்திராத ஒரு கருத்தைக் கூறுகின்றான். உண்மையில், மார்க்கத்தைப் பொய்பிப்போன் யார் தெரியுமா? என்றொரு வினாவை எழுப்பி அதற்கு விடையாக, ''அவன்தான் அனாதையைக் கடிந்து விரட்டுபவன்''எனக் கூறுகின்றான். ஆம், அனாதைகளுக்கு கருணைகாட்டாதோர், அவர்களைப் பராமரிக்காதோர், மார்க்கத்தை நிராகரித்து பொய்ப்பிப்பவர்களாவர் என்பதை அல்குர்ஆனின் கருத்தாகும். இஸ்லாம் அநாதைகள் விடயத்தில் மிகக் கூடுதலான கரிசனை காட்டுகின்றது. ஓர் இஸ்லாமிய சமூகத்தில் அவர்களுக்கு நிச்சயம் முறையான வாழ்வு கிட்டும். அங்கு அவர்கள் எவ்வகையிலும் புறக்கணிக்க இடமளிக்காது. ஸூறத்துல் அன்பாலின் 41வது வசனம், ஸூறத்துல் ஹஸ்ரின் 7வது வசனம், ஸூறத்துல் பகராவின் 82,177,215 ஆகிய வசனங்கள், ஸூறத்துன்னிஸாவின் 36வது வசனம ஆகியவை உடபட இன்னும் பல அல்குர்ஆன் வசனங்கள் அனாதை பராமரிப்பு பற்றி வலியுத்துகின்றன. அடுத்து, அல்லாஹ் கூறுகின்றான்:
''மேலும், அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டமாட்டான்'' இங்கு அல்லாஹ் தனிப்பட்ட முறையில் ஏழைகளுக்கு உணவளித்து, பிறரையும் அதன் பால் தூண்டி, வறுமையை ஒழிக்கும் -பசியை விரட்டும்- பணியில் ஈடுபடாதவர் பற்றியே குறிப்பிடுகின்றான். எனவே, தனிப்பட்ட முறையில் ஏழைகளுக்கு உணவளிக்கும் அதே நேரத்தில் பிறரையும் அதற்காகத் தூண்டி, வறுமையை, பசிக்கொடுமையை ஒழிக்கும் முயற்சியை ஓர் அமைப்பாக, கூட்டாக மேற்கொள்ளும் விடயத்தில் தனது பங்களிப்புச் செலுத்தாத வரைக்கும் அவர் மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவராகவே கருதப்படுவார்.
அல்குர்ஆன் மேலும் பல இடங்களிலும் இதே கருத்தைக் கூறியிருப்பதனை கவனிக்க முடிகின்றது. உதாரணமாக, கீழ்வரும் வசனங்களைக் குறிப்பிடலாம்:''நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும்படி தூண்டவுமில்லை. ஆகவே, இன்றைய தினம் அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் இருந்து வடியும் சீழ் ஜலத்தைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக்கூறப்படும். அதனைக் குற்றவாளிகளைத் தவிர எவரும் புசிக்கமாட்டார்கள்''(69:33) ''ஜாக்கிரதை! நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை. ஏழைகளுக்கு ஆகாரம் அளிக்கும்படி தூண்டுவதுமில்லை. பிறருடைய வாரிசுப் பொருட்களை பேராசையுடன் விழுங்குகிறீர்கள். மேலும், நீங்கள் மிகவும் அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்(88:1720)தான் தனிப்பட்ட முறையில் தனிமனிதன் என்ற வகையில் தன் மீதுள்ள பொருப்புக்களை நிறைவேற்றினால் போதுமானது. சமூகக் கடமைகளை நிறைவேற்றும் தேவை தனக்கில்லை. பிறர் செய்யும் தவறுகள், பாவங்கள், அநீதிகள் தன்னைத் தாக்காது எனக் கருதுவோருக்கு இந்த வசனங்கள் பெரும் சாட்டையடியாகவே அமையும். இத்தகைய சிந்தனைப்போக்கைக் கொண்டு வாழ்பவர்களைத்தான் இந்த வசனங்கள் நிராகரிப்பாளர்கள், மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவர்கள் என வர்ணிக்கின்றன.இனி ஸூராவின் அடுத்த வசனங்களை நோக்குவோம்:''எனவே, அத்தகைய தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் தங்களது தொழுகையில் பொடுபோக்காகவே இருக்கின்றனர். அவர்கள் பிறரருக்குக் காண்பிப்பதற்காகவே தொழுகின்றனர்.
மேலும், அவர்கள் அற்பப் பொருட்களையும் மக்களுக்குக் கொடுக்காமல் தடுத்துக் கொள்கின்றனர்''ஏன், அதிஷ்டத்தையும் அருளையும் கொடுக்க வேண்டிய தொழுகை, இவர்களைப் பொருத்தவரையில் கேட்டையும் இழிவையும் வழஙகுவதாக அமைய வேண்டுமா? ஆம், அவர்கள் தொழுவது என்னவோ உண்மைதான். ஆனால், அவர்களது தொழுகை, தொழுகையாக இல்லை. அது போலியானதாக இருக்கின்றது. அவர்கள் நிறைவேற்றும் தொழுகை, அவர்களில் அனாதைகள்பால் அன்பையும் கனிவையும் ஏற்படுத்தவில்லை, ஏழைகள் பசிக் கொடுமையில் வாழ்வதைப் பார்த்து, அவர்களின் உரிமைகள் கொடுக்கப்படாமலிருப்பதைக் கண்டு கொதித்தெழத் தூண்டவில்லை. எப்போது தொழுகை பாவங்களிலிருந்தும் மானக்கேடான செயல்களிலிருந்தம் தொழுபவரைத் தடுக்கவில்லையோ அப்போது அது நோக்கத்தை இழந்த அர்த்தமற்ற சடங்காகி, வெறும் அசைவுகளாக மாறிவிடுகின்றது. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் இத்தகைய இயந்திர அசைவுகளாக அமைவதனை அங்கீகரிப்பதில்லை. மாறாக, அனைத்து வணக்க வழிபாடுகளும் மனித உள்ளத்துக்கு பக்குவத்தையும் பண்பாட்டையும் வழங்கி தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் நல்லது செய்ய, நன்மை புரியத் தூண்டுவனவாக இருக்க வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. இக்கருத்தை எத்துனை அழகாகக் கீழ்வரும் வசனங்கள் விளக்கிக் கூறுகின்றன என்பதைப் பாருங்கள்: ''மேற்கிலோ ,கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது மட்டும் நன்மை செய்ததாக ஆகிவிட மாட்டாது, எனினும் உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் மலக்குகளையும் வேதத்தையும் நபிமார்களையும் விசுவாசித்து, பொருளை அவனது விருப்பத்தைப் பெறுவதற்காக இனபந்துக்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் யாசகர்களுக்கும் விடுதலையை விரும்பியவர்களுக்கும் கொடுத்துதவி செய்து, தொழுகையைக் கடைபிடித்து, ஸக்காத்தும் கொடுத்து வருகின்றாறோ அவரும், வாக்குறுதி செய்த சமயத்தில் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவோர்களும் நஷ்டத்திலும் கஷ்டத்திலும் கடுமையான யுத்த நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய இவர்கள் தாம் நல்லோர்கள். அன்றி, இவர்கள் தான் உண்மையானவர்கள் பயபக்தியுடையவர்கள்.''(2:177)நன்மைக்காக உழைப்பதும் சமூகத்தில் கருணையை வளர்ப்பதும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் களைவதும் ஒரு முஸ்லிமின் நீங்காக் கடமையாகும். அவ்வாறு இல்லாத போது அவன் தன் மார்க்கத்தையே பொய்ப்பிப்பவனாகக் கருதப்பட்டு அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவனாக மாறுகிறான். அவன் நிறைவேற்றும் தொழுகையும் வணக்கவழிபாடுகளும் கூட அவனுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக அவை அவனுக்குப் பெரும் சாபக் கேடாக மாறிவிடுகின்றன.
-----சகோ.முஹம்மது தஸ்தகீர்.
நன்றி..அதிரை எக்ஸ்பிரஸ்
Tuesday, September 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment