1627. நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டு விட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூ ருஹ்கி ஆவார். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் இப்னு அபீ மூஸா (ரஹ்) கூறினார்: ''என்னுடைய (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்'' என்றோ 'ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம் என்றோ (என் தந்தை அபூ மூஸா (ரலி)) கூறினார்கள். நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கி விட்டது. (அபிசினியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்னெவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, 'உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம்'' என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அஸ்மா அவர்களைக் கண்டபோது, 'இவர் யார்?' என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். '(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்'' என்று ஹஃப்ஸா (ரலி), 'இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்'' என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி), 'உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில்... அல்லது பூமியில்... இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவு மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்'' என்று கூறினார்கள். 'அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்'' என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4230-4231 அபூ மூஸா (ரலி).
Saturday, October 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment