1760. பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, '(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், 'கிடைக்காது'' என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், '(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!'' என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார். அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்க்கித்தனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, 'நீ நெருங்கி வா!'' என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, 'நீ தூரப்போ!'' என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, 'அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்'' என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3470 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).
1761. நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, '(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?' என்று கேட்டதற்கு இப்னு உமர் (ரலி), 'அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்பான். அதற்கு, அவன் 'ஆம், என் இறைவா!' என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், 'நாம் இத்தோடு ஒழிந்தோம்' என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்' என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2441 ஸஃப்வான் பின் முஹ்ரிஜ் (ரலி).
Sunday, November 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment