1749. அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய ('லவ்ஹுல் மஹ்ஃபூழ்' என்னும்) பதிவேட்டில் - அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது - 'என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது'' என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).
1750. அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6000 அபூஹுரைரா (ரலி).
1751. (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று கூறினார்கள்.
புஹாரி :5999 உமர் (ரலி).
1752. (முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் 'நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என் மீது இறைவனுக்கு சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாவரும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்து விடுவான்'' என்று சொல்லி(விட்டு இறந்து) விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான். தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான். பிறகு, 'நீ எதற்காக இப்படிச் செய்தாய்?' என்று கேட்டான். அதற்கு அவர், 'உன் அச்சத்தினால் தான். நீ நன்கறிந்தவன்'' என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7506 அபூஹுரைரா (ரலி).
1753. உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒருவர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்டபோது தன் மகன்களிடம், 'உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்'' என்று கேட்டார். அவர்கள், 'சிறந்த தந்தையாக இருந்தீர்கள்'' என்று பதில் கூறினர். அதற்கு அவர், 'நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. எனவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்'' என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரின் உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) 'இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?' என்று கேட்டான். அவர், 'உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் (இப்படி உத்திரவிட என்னைத் தூண்டியது)'' என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3478 அபூ ஸயீத் (ரலி).
Wednesday, November 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment