1851. உமர் (ரலி) நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபியவர்களோடு (தான் இறைத்தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். பனீமகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனுடைய முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர் (ஸல்) தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து வீட்டு, 'நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்'' என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகிறீர்களா?' என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்'' என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், (உன் நிலைபற்றி) நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், 'என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன'' என்றான். நபி (ஸல்) அவர்கள், 'உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு, 'நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னை சோதிப்பதற்காக) மறைத்து வைத்துள்ளேன். (அது என்ன என்று சொல்)'' என்றார்கள். இப்னு ஸய்யாத், 'அது 'துக்' என்று கூறினான். (அதாவது 'துகான்' என்பதை 'துக்' என அரைகுரையாகச் சொன்னான்.) உடனே நபி (ஸல்) அவர்கள், 'தூர விலகிப் போ! நீ உன் எல்லையை தாண்டிவிட முடியாது என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவனைக் கொல்ல எனக்கு அனுமதியுங்கள். இவனுடைய கழுத்தை நான் சீவி விடுகிறேன்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை'' என்றார்கள்.
புஹாரி : 3055 இப்னு உமர் (ரலி).
1852. நபி (ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்ச தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து அவனுடைய பேச்சு திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்து நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தன்னுடைய படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, 'ஸாஃபியே!'' (இது இப்னு ஸய்யாதின் பெயராகும்.) என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், 'அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவு படுத்தியிருப்பான்'' என்றார்கள்.
புஹாரி : 3056 இப்னு உமர் (ரலி).
1853. நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வைஅவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
புஹாரி : 3057 இப்னுஉமர் (ரலி).
Sunday, January 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment