உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
"இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?' என்று நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், '(ஒரு முறை மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன், நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை பார்த்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து, நபி(ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது, 'என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்" என்று கூறினார்கள்.
புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3678
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, 'யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), 'இவர் பிலால்' என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், 'இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), 'இது உமருடையது' என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)" என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்" என்று கேட்டார்கள்.
புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3679
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான் (ஜீப்ரிலிடம்), 'இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், 'உமர் அவர்களுக்குரியது' என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. எனவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்" என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, 'தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார்கள்.
புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3680
Thursday, August 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment