"மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம், 'சொர்க்கவாசிகளுள் மிகக் குறைந்த பதவி உடையவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'சொர்க்கவாசிகள் அனைவரும் சொர்க்கத்திற்குள் நுழைந்த பிறகு ஒருவர் வருவார். அவரிடம் நீ (சென்று) சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்! என்று கூறப்படும். அதற்கு அவர், இறைவா! எப்படி (நான் நுழைவேன்)? மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களைப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு விட்டார்களே? என்று கூறுவார். அவரிடம், உலக அரசர்களில் ஒருவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியைப் போன்று உனக்குக் கிடைத்தால் திருப்தி தானே? என்று கேட்கப்படும். அதற்கு அவர், திருப்தியடைவேன் இறைவா! என்பார். அப்போது, அதுவும் உனக்குக் கிடைக்கும்; அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் என்று இறைவன் குறிப்பிடுவான். ஐந்தாம் மடங்கு பற்றிக் கூறும்போது அவர், திருப்தியடைந்து விட்டேன் இறைவா! என்பார். மேலும், இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும். உன் மனம் விரும்புகின்ற, உன் பார்வை இரசிக்கின்ற அனைத்தும் உனக்குக் கிடைக்கும் என்று இறைவன் கூறுவான். அப்போது அவர், திருப்தியடைந்தேன் இறைவா! என்று கூறுவார். அவரே சொர்க்கவாசிகளுள் மிகக் குறைந்த பதவி உடையவர்' என்று இறைவன் கூறினான்.பின்னர் மூஸா (அலை), 'இறைவா! சொர்க்கத்தில் மிக உயர்ந்த பதவியுடையவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், 'அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்குரிய பதவிகளையும் நானே தீர்மானித்து அவற்றின்மீது நான் முத்திரை பதித்து விட்டேன். எனவே, (அவர்களது பதவிப் பேரின்பத்தை) எந்தக் கண்ணும் பார்த்தில்லை; எந்தக் காதும் கேட்டதில்லை; எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியதில்லை' என்றான்.இதை மெய்ப்பிக்கும் வகையில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில், 'அவர்கள் செய்த (நற்)செயல்களுக்குரிய கூலியாக அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டுள்ள (மறுமையின்) அகநிறைவுப் பேரின்பத்தை எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது' (32:17) என்று இடம் பெற்றுள்ளது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : முகீரா பின் ஷுஃபா (ரலி).
முஸ்லிம்-அத்தியாயம்: 1, பாடம்: 1.84, ஹதீஸ் எண்: 276
குறிப்பு:
இந்த அறிவிப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, முகீரா பின் ஷுஃபா (ரலி) சொற்பொழிவு மேடை மீது நின்றவாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது. அதிலும் அப்துல் மலிக் இப்னு அப்ஜர் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், "இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது (மர்ஃபூஉ)" என்றும் முதர்ரிஃப் பின் தரீஃப் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், "முகீரா (ரலி) அவர்கள் தாமே சொன்ன செய்தி" (மவ்கூஃப்) என்றும் இடம் பெற்றுள்ளது. உபைதுல்லாஹ் அல்-அஷ்ஜயீ (ரஹ்) வழி அறிவிப்பில், "மூஸா (அலை) அல்லாஹ்விடம் சொர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த பதவிக்குரியவரைப் பற்றிக் கேட்டார்கள்" என்று முஃகீரா (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது
Thursday, July 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment