அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Tuesday, January 27, 2009

(தஃப்ஸீர்) விரிவுரை

1901. ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், 'அஸ்ஸலாமு அலைக்கும்'' (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள். அவரின் ஆட்டு மந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு ஸலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 04:94) (இங்கே 'உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.
புஹாரி : 4591 இப்னு அப்பாஸ் (ரலி).


1902. அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது 'உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று. மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:189) என்ற இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்களின் விஷயத்தில் இறங்கியது.
புஹாரி : 1803 அபூ இஸ்ஹாக் (ரலி).


1903. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) 'இந்த இணைவைப்பாளர்கள் யாரை (க்கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது யார் என்பதற்காக அவனுடைய நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் 'ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தம் (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
புஹாரி :4714 இப்னு மஸ்ஊத் (ரலி).


1904. நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், 'அது (நயவஞ்சகர்களை)அம்பலப்படுத்தக் கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டு விட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்'' என்று கூறினார்கள். நான் அவர்களிடம் , 'அல் அன்ஃபால்' எனும் (8 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பத்ருப்போர் குறித்து அது அருளப்பெற்றது'' என்று பதிலளித்தார்கள். நான் 'அல்ஹஷ்ர்' எனும் (59 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 4882 இப்னு அப்பாஸ் (ரலி).


1905. (என் தந்தை) உமர் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள் மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருள்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்து விட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ, மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவரின் பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?

2. 'கலாலா' என்றால் என்ன?

3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்
புஹாரி : 5588 இப்னு உமர் (ரலி).


1906. குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ் (ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே 'இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.
புஹாரி : 3966 அபூதர் (ரலி).

No comments: