அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Tuesday, January 27, 2009

(தஃப்ஸீர்) விரிவுரை

1897. ''(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!'' என்ற (திருக் குர்ஆன் 04:06) இறை வசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.
புஹாரி : 2212 ஆயிஷா (ரலி).


1898. ''ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறில்லை'' என்னும் (4:128) திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது ஆயிஷா (ரலி), 'ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத வயோதிகம் முதலியவற்றைக் கண்டு அவளைப் பிரிந்துவிட விரும்பும் நிலையில், அவள் 'என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக் கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்து விடு' என்று சொல்வதை இது குறிக்கும்'' என்று கூறிவிட்டு, 'இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால் தவறேதுமில்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2694 ஆயிஷா (ரலி).


1899. இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டு விட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், 'ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றி விடவில்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4590 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).


1900. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், 'ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றியும், 'மேலும், (கொலை செய்யக்கூடாது என) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்'' என்று தொடங்கி 'பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர் தவிர'' என்று முடியும் (திருக்குர்ஆன் 25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நானே அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (எனவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)'' என்று கூறிக் கொண்டனர். எனவே, அல்லாஹ் 'அவர்களில், மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத்தவிர. அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 25:70 வது) வசனத்தை அருளினான்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 4765 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).


No comments: