அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Tuesday, January 27, 2009

(தஃப்ஸீர்) விரிவுரை

1893. பனூ இஸ்ராயீல்களுக்கு, '(ஊருக்குள் நுழையும்போது) அதன்வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் 'ஹித்தத்துன்' ('பாவ மன்னிப்புக் கோருகிறோம்') என்று சொல்லியபடியும் நுழையுங்கள்'' என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்' என்னும் சொல்லை 'ஹின்தத்துன் - கோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய விதை என்று கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3403 அபூஹுரைரா (ரலி).


1894. அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து 'வஹீ' (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப் பெற்றதைவிட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
புஹாரி : 4982 அனஸ் (ரலி).


1895. 'யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர் (ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார் ''இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்'' (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர் (ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்'.'
புஹாரி : 45 உமர் (ரலி).


1896. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்'' (திருக்குர்ஆன் 04:03) என்னும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கிற - அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் - அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும். மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்து கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே அல்லாஹ், 'பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும் நினைவு படுத்துகிறான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவு படுத்துகிறான்)'' என்னும் (திருக் குர்ஆன் 04:127) வசனத்தை அல்லாஹ் அருளினான். மேலும், 'இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும்...'' என்று அல்லாஹ் கூறியிருப்பது, 'அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்.'' என்னும் (திருக்குர்ஆன் 04:03) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில், 'மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ''என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணந்து கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் 'நீதியான முறையிலே தவிர மணந்து கொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
புஹாரி : 2494 உர்வா பின் ஜூபைர் (ரலி).

No comments: